/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வழி ஏரிகளை பராமரிக்க கோரிக்கை
/
தேர்வழி ஏரிகளை பராமரிக்க கோரிக்கை
ADDED : ஆக 24, 2024 01:18 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பிரித்வி நகர் பின்புறம், 7.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆழ ஏரி உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள ஆழ ஏரிக்குள், பிரித்வி நகர், நேதாஜி நகர் பகுதிகளில் சேகரமாகும் தினசரி குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
தேர்வழி ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ஆழ ஏரி மாசு அடைந்து முக்கிய நீர் ஆதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், கோட்டக்கரை பின்புறம், 5.67 ஏக்கர் பரப்பளவு, தாமரை ஏரி உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள அந்த ஏரிக்குள் கோட்டக்கரை பகுதியின் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமரை ஏரி முழுதும் கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது.
மேற்கண்ட இரு ஏரிகள் மாசு அடைந்த நிலையில், நிலத்தடி நீரின் தன்மையும் பாதிக்கப்பட்டு வருகிறது. தேர்வழி ஊராட்சியின் நிலத்தடி நீர், பருகுவதற்கு தரமான குடிநீராக இருந்த நிலையில், தற்போது தரம் குறைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்வளத்தை காக்கும் பொருட்டு, மேற்கண்ட இரு ஏரிகளையும் பாதுகாத்து துாய்மையாக பராமரிக்க வேண்டும் என தேர்வழி கிராம மக்கள் சார்பில், கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

