/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராம சபை கூட்டங்களில் சலசலப்பு வசதிகளை கேட்டு துளைத்தெடுப்பு
/
கிராம சபை கூட்டங்களில் சலசலப்பு வசதிகளை கேட்டு துளைத்தெடுப்பு
கிராம சபை கூட்டங்களில் சலசலப்பு வசதிகளை கேட்டு துளைத்தெடுப்பு
கிராம சபை கூட்டங்களில் சலசலப்பு வசதிகளை கேட்டு துளைத்தெடுப்பு
ADDED : ஆக 16, 2024 12:27 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்களூர், ஈக்காடு, புல்லரம்பாக்கம், வெள்ளியூர் உள்ளிட்ட 38 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்று மனுக்களை பெற்றார். ஊராட்சி தலைவர் தில்லைகுமார் தலைமை வகித்தார்.
கலெக்டர் பேசியதாவது:
இந்த ஊராட்சியில் குடிநீர் உப்பு தன்மையுடன் இருப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. தண்ணீரை சோதனை செய்து, தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், கச்சூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு நீடித்ததால், மற்றொரு தேதியில் கிராம சபை கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
ஆர்.கே.பேட்டை
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெள்ளாத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாகுப்பம் மேடு கிராமத்தில், கிராம சபை கூட்டம் நடத்தது. இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவாலங்காடு
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளிலும், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த கோரி மனு அளிக்கப்பட்டது.
திருத்தணி
திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கோரமங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் நரசிம்மராஜு தலைமை வகித்தார்.
இதில், திருத்தணி தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சந்திரன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பொன்னேரி
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேற்காடு ஊராட்சியில் தலைவர் மாலதி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆக்கிரமிப்பாளர்களால் குளம்சுருங்கி வருவதாகவும், அதை மீட்டு சீரமைக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் வருவதில்லை.
அடுத்த கூட்டத்திற்கு வரவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில், 100 நாள் பணி வழங்கவில்லை எனக்கூறி, வீடுகளில் கறுப்பு கொடி கட்டி வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு, அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவை அகற்றப்பட்டன.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் அஸ்வினி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஏரி உபரிநீர் கால்வாயை துார்வாரி அகலப்படுத்த வேண்டும். சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நமது நிருபர் குழு -