/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரியான திட்டமிடல் இல்லாததால் 8 ஆண்டாக மேம்பால பணி மந்தம் 13 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம்
/
சரியான திட்டமிடல் இல்லாததால் 8 ஆண்டாக மேம்பால பணி மந்தம் 13 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம்
சரியான திட்டமிடல் இல்லாததால் 8 ஆண்டாக மேம்பால பணி மந்தம் 13 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம்
சரியான திட்டமிடல் இல்லாததால் 8 ஆண்டாக மேம்பால பணி மந்தம் 13 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம்
ADDED : ஆக 01, 2024 12:49 AM

திருவள்ளூர்:சரியான திட்டமிடல் இன்றி ஆரம்பிக்கப்பட்ட விடையூர் - கலியனுார் மேம்பாலம், எட்டு ஆண்டுகளாகியும் இணைப்பு சாலை நிறைவு பெறாமல் இருப்பதால், இந்த ஆண்டும் 13 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது, கலியனுார் கிராமம்.
கோரிக்கை
கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இக்கிராமத்தைச் சுற்றிலும், குப்பம்கண்டிகை, மணவூர், சின்னம்மாபேட்டை, பழையனுார் உள்ளிட்ட 13 கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இக்கிராம மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக, ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், 13 கிராமங்களும் துண்டிக்கப்படும். இதனால், மாணவ - மாணவியர் விடையூர் பள்ளிக்கும், பகுதிவாசிகள் திருவள்ளூர் செல்லவும் திருவாலங்காடு சென்று, 25 கி.மீ., சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, விடையூர் - கலியனுார் இணைக்கும் வகையில், ஆற்றின் குறுக்கே 2016- - 17ல், 3.60 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆற்றின் நீளம் அதிகமாக இருப்பதால், சரியான திட்டமிடல் இன்றி, மேம்பாலத்தின் 120 மீட்டருக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டதால், இருபுற கரையும் மேம்பாலத்துடன் இணைக்கப்படாமல் உள்ளது.
அலட்சியம்
இதுகுறித்து பூண்டி ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் சுலோக்சனா கூறியதாவது:
கலியனுார் - விடையூர் மேம்பாலம், அதிகாரிகளின் தவறான திட்டமிடலால், கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் கரையை இணைக்க முடியாமல், எட்டு ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
ஊரக வளர்ச்சி துறையினர், கூடுதலாக, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு கேட்டு, அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனரே தவிர, பால பணி நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுவதில்லை.
அதிகாரிகளின் அலட்சியத்தால், இந்த ஆண்டும் மாணவ - மாணவியர் மற்றும் கிராமவாசிகள் வெள்ளத்தில் தத்தளிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.