/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் அதிருப்தி ஆட்டோவில் மாணவர்கள் பயணம் செய்யும் அவலம்
/
அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் அதிருப்தி ஆட்டோவில் மாணவர்கள் பயணம் செய்யும் அவலம்
அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் அதிருப்தி ஆட்டோவில் மாணவர்கள் பயணம் செய்யும் அவலம்
அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் அதிருப்தி ஆட்டோவில் மாணவர்கள் பயணம் செய்யும் அவலம்
ADDED : ஆக 26, 2024 11:13 PM

கடம்பத்துார்: தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியும் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் அரசு பள்ளி மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வருவதோடு ஷேர் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்தில் 59, துவக்கப்பள்ளி, 17, நடுநிலைப்பள்ளி, 14, உயர்நிலைப்பள்ளி, 6, மேல்நிலைப்பள்ளி, என 96 அரசு பள்ளிகள் உள்ளன.
கடம்பத்துார் ஒன்றியத்தில் தண்டலம் - அரக்கோணம், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி, மப்பேடு - சுங்குவார்சத்திரம், திருமழிசை- ஊத்துக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் என ஐந்து நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த நெடுஞ்சாலை வழியே இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து மற்றும் மாநகர பேருந்துகளை நம்பி மாணவ, மாணவியர் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதிகளில் இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகளான தடம் எண் 160, தடம் எண் 82 சி மற்றும் மாநகர பேருந்துக்களான 597 போன்ற அரசு பேருந்துகள் பள்ளி நேரங்களில் முறையாக இயக்கப்படுவதில்லை.
இதனால் மாணவ, மாணவியர் ஷேர் ஆட்டோக்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து கடம்பத்துார், பேரம்பாக்கம், மப்பேடு, சுங்குவார்சத்திரம் வழியாக காஞ்சிபுரத்திற்கு இயக்கப்பட்ட தடம் எண் 160 என்ற அரசு பேருந்து தற்போது நிறுத்தப்பட்டது.
இதனால் காலை, மாலை வேலைகளில் கடம்பத்துாரில் இருந்து பேரம்பாக்கம், மப்பேடு, பண்ணுார் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கு செல்லும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியும் அரசு பள்ளி மாணவர்கள் பணம் கொடுத்து ஷேர் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அரசு பேருந்தை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்தாக மாற்றி இயக்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தடம் எண் 160 அரசு பேருந்தை முறையாக இயக்கவும் பள்ளி நேரங்களில் அரசு பேருந்துகளை முறையாகவும், கூடுதலாகவும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்ற மறுக்கும் பேருந்துகள்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. ஆனால் பேருந்துகள் சரியான முறையில் இயக்கப்படவில்லை. சில நேரங்களில் மாணவர்களை அரசு பேருந்துகள் ஏற்ற மறுப்பதோடு தாமதமாக வருகின்றன. இதனால் நாங்கள் இலவச பஸ் பாஸ் இருந்தும் ஷேர் ஆட்டோக்களில் காசு கொடுத்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கிறோம்.
- அரசு பள்ளி மாணவர்கள்.