/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு
/
ஆரணி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு
ADDED : மே 28, 2024 05:45 AM

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம், நகரி அருகே மலைக்குன்றுகளில் உற்பத்தியாகும் ஆரணி ஆறு பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி அணைக்கட்டு வழியே, 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.
பின் இங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், கல்பட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு வழியே பாய்ந்து, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து, பழவேற்காடு அருகே, புலிக்காட்' எனும் இடத்தில் கடலில் கலக்கிறது.
இதில் தமிழக பகுதிகளில், ஆற்றின் கரையோரம் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.
ஊத்துக்கோட்டை பஜார் பகுதியை ஒட்டி, கண்ணதாசன் நகரில் ஆரணி ஆற்றின் கரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிலர் குடிசை போட்டு வசித்து வந்தனர். பின் ஒவ்வொருவராக ஆக்கிரமிப்பு செய்து, பல வீடுகளாக மாறின.
மேலும், கரையின் ஓரம் மணல் கொட்டி சமன்படுத்தப்பட்டு உள்ளது. இது அடுத்த சில தினங்களில் பிளாட்டுகளாக மாறும் நிலை ஏற்பட்டு விடும். தற்போது ஒரு நகர் போல் இப்பகுதி உருவாகி உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை, குடிநீர், மின்விளக்கு வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இது ஆக்கிரமிப்பாளர்களுக்கு சான்று வழங்கியது போல் உள்ளது.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து, வீடுகள் கட்டியிருப்பது குறித்து, வருவாய் துறைக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, வருவாய் துறையினர் நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.
ஆக்கிரமிப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த மக்கள் கூறுகையில், 'இங்கு விவசாயம் செய்து கொண்டு இருந்தவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிஉள்ளோம்' என்றனர்.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து, எவ்வளவு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது என்பது குறித்து, கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.