/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பச்சைப்பயறு பயிரிடுவதில் ஆர்வம் குறைவு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு
/
பச்சைப்பயறு பயிரிடுவதில் ஆர்வம் குறைவு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு
பச்சைப்பயறு பயிரிடுவதில் ஆர்வம் குறைவு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு
பச்சைப்பயறு பயிரிடுவதில் ஆர்வம் குறைவு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு
ADDED : மார் 02, 2025 12:01 AM

பொன்னேரி, பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கோடைக்கால பயிரான பச்சைப்பயறு பயிரிடப்படுகிறது. குறைந்த செலவில், ஓரளவிற்கு வருவாய் தரும் பயிராக இருப்பதால், விவசாயிகள் இதை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுவர்.
அறுவடையின் போது, பச்சைப்பயறு செடிகளை அறுவடை செய்து, களங்களில் உலர வைத்து, பருப்புகளை தனியாக பிரிக்க வேண்டும். இதற்கு, 1 ஏக்கருக்கு, 20 - 25 பணியாட்கள் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பச்சைப்பயறு அறுவடை காலங்களில், ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஒரு சில விவசாயிகள், பச்சைப்பயறு செடிகள் மீது மருந்து தெளித்து, காய்ந்த பின், இயந்திரங்கள் உதவியுடன் அறுவடை செய்தனர். இதில், பச்சைப்பயறு இயந்திரத்தில் சிக்கி வீணாகின. இதனால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை.
ஆட்கள் பற்றாக்குறையால், நடப்பாண்டு பச்சைப்பயறு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்தாண்டு, 12,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டது. நடப்பாண்டு, 4,500 ஏக்கர் பரப்பில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பச்சைப்பயறு நல்ல லாபம் தரக்கூடியவை. அதேசமயம் அறுவடைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வேறு வழியின்றி, களைகளை அழிக்கும் மருந்துகளை செடியின் மீது தெளித்து, காய்ந்த பின் அறுவடை செய்ய வேண்டியுள்ளது.
இந்த வழிமுறை சுகாதாரத்திற்கு உகந்தது அல்ல என்பதால், பெரும்பாலான விவசாயிகள் பச்சைப்பயறு பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆட்கள் கிடைக்கும் கிராமங்களில் மட்டும் தற்போது பயிரிடப்பட்டு உள்ளன. வேறு வழியில்லாமல் விளைநிலங்களை தரிசாக போட்டு வைத்து உள்ளோம். வேளாண்மை துறை கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.