/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'கமிஷன்' கேட்கும் ஊழியர்களால் விவசாயிகள் 'அப்செட்' நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் அடாவடி
/
'கமிஷன்' கேட்கும் ஊழியர்களால் விவசாயிகள் 'அப்செட்' நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் அடாவடி
'கமிஷன்' கேட்கும் ஊழியர்களால் விவசாயிகள் 'அப்செட்' நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் அடாவடி
'கமிஷன்' கேட்கும் ஊழியர்களால் விவசாயிகள் 'அப்செட்' நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் அடாவடி
ADDED : மே 23, 2024 11:53 PM

சென்னையை ஒட்டிய மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், விவசாயமே பிரதான தொழில். ஆற்று, ஏரி மற்றும் கிணற்று நீர் பாசனத்தில் விவசாயம் நடக்கிறது.
சம்பா, நவரை மற்றும் சொர்ணவாரி ஆகிய பருவங்களில், மூன்று மாவட்டங்களிலும் விவசாயிகள் பயிரிடும் நெல், அறுவடைக்கு பின், அரசு சார்பில் கொள்முதல் செய்வதற்கு, நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,67,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் நெல் வாங்க, 108 கொள்முதல் நிலையங்கள் பிப்., மாதம் திறக்கப்பட்டன.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 இடங்களிலும், திருவள்ளூரில் 38 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
தேசிய நுகர்வோர் கழக கூட்டமைப்பினர் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி இருப்பதாக, விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
மூன்று மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், அரசு சார்பில் அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், அவற்றை கொள்முதல் செய்வதிலும், பாதுகாப்பதிலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
நிலையங்களில் முன்பதிவு முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், பல இடங்களில், வி.ஏ.ஓ.,விடம் சிட்டா மற்றும் அடங்கலை காண்பித்து, போலியாக சான்றிதழ் பெற்று, பதிவு செய்து நெல் விற்கப்படுகிறது. அதிகாரிகள், இடைத்தரகர்கள் சேர்ந்து, இந்த முறைகேடில் ஈடுபடுகின்றனர்.
பெரும்பாலான இடங்களில், நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய போதிய இடவசதி இல்லை. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்கவும் உரிய ஏற்பாடு செய்யவில்லை.
தார்ப்பாய் கொண்டு அவற்றை மூடாததால், சமீபத்தில் பெய்த மழையில், ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்தன. தற்போதும், பல நிலையங்களில் தார்ப்பாய் கூட இல்லாத அவலம் உள்ளது.
ஆங்காங்கே அறுவடை செய்யப்படும் நெல், திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் கொட்ட இடமில்லாததால் சாலையோரங்களிலும், நெல் உலர்த்தும் களங்களிலும் கொட்டி வைக்கப்படுகிறது. அவற்றை தினமும் பாதுகாப்பதே பெரிய சவாலாக உள்ளது.
நெல் மூட்டைகள் பாதுகாக்க பல இடங்களில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கூரை, சில இடங்களில் சேதமடைந்துள்ளது.
நெல் மூட்டைகள் பாதுகாக்கும் நடவடிக்கையாக, அரசு சார்பில், தற்காலிகமாக கற்கள் மற்றும் சவுக்கு கட்டைகள் கொண்டு கூடாரம் அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. அவை, மழையால் சேதமாகாதபடி இருக்க வேண்டும்.
புதிதாக பல இடங்களில், அறுவடை நடந்து வருகிறது. அப்பகுதிகளில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும்.
பல கொள்முதல் நிலைய பகுதிகளில் நெல்லை உலர்த்தவும், மழையில் நனையாமல் பாதுகாக்கவும் கூடாரம் அல்லது சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், வாங்கிய நெல் மூட்டைகளை பாதுகாக்க, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு ஐந்து என, தலா 10 தார்ப்பாய் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட அன்றே, அனைத்து நெல்மூட்டைகளும், நெல் அரவை இயந்திரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 1.20 கோடி கிலோ நெல் பாதுகாப்புக்காக வைக்கும் வகையில், ஆங்காங்கே கிடங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
- வேளாண் துறை அதிகாரிகள்,
திருவள்ளூர்.
சிலாவட்டத்தில் தானிய கிடங்கு கட்டுமான பணி நடந்து வருகிறது. செங்கை மாவட்டத்தில், 60 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கொள்முதல் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கி தர, வருவாய்த் துறையிடம் கேட்டுள்ளோம். இடம் ஒதுக்கிய பின், கொள்முதல் நிலையம் கட்டடப்படும்.
- நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள்,
செங்கல்பட்டு.
-- நமது நிருபர்கள் குழு -