/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு சிமென்ட் விற்பனை நிறுத்தம்?
/
நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு சிமென்ட் விற்பனை நிறுத்தம்?
நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு சிமென்ட் விற்பனை நிறுத்தம்?
நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு சிமென்ட் விற்பனை நிறுத்தம்?
ADDED : மார் 12, 2025 01:53 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு தொகுப்பு வீடுகள் கட்டுபவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை விலையில் அரசு சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கின் வாயிலாக, சலுகை விலையில் அரசு சிமென்ட் வழங்கி வருகிறது.
இங்கு, அரசு தொகுப்பு வீடுகள், பிளான் அப்ரூவல் வாங்கி வீடு கட்டுவோர் மற்றும் பழுதடைந்த வீடுகள் சீரமைப்பதற்கும், ஒரு மூட்டை சிமென்ட், 216 ரூபாய் விலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் வழங்கப்படுகிறது.
அதாவது, அரசு சார்பில் வழங்கப்படும் தொகுப்பு வீடுகளுக்கு, அதிகபட்சமாக 100 மூட்டைகளும், பிளான் அப்ரூவல் வாங்கி வீடுகள் கட்டுவோருக்கு, அதிகபட்சமாக 200 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது.
வீடுகள் பராமரிப்பு பணிகளுக்கு ரேஷன் கார்டு வாயிலாக, அதிகபட்சமாக 25 மூட்டைகள் வழங்கப்படுகின்றன. ஆர்வம் காட்டுவதில்லை
இந்த சலுகை விலை சிமென்ட் மூட்டைகள் வாங்குவதற்கு கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் ஆகியோரின் சான்றுகள் மற்றும் வீட்டுமனை பட்டா அளித்து பெற்று கொள்ளலாம்.
இதற்காக, வங்கிகள் வாயிலாக பணம் செலுத்தி, ரசீது கொடுத்து வாணிப கிடங்கில் சிமென்ட் மூட்டைகள் பெறலாம்.
ஆனால், பயனாளிகள் சலுகை சிமென்ட் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், அதிகபட்சமாக, 100 மூட்டைகள் மட்டுமே கொடுப்பதால், வீடுகள் கட்டுவோர், வாடகை வாகனம் வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு வந்து, சிமென்ட் மூட்டைகள் பெற்று செல்ல வேண்டும்.
இதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 1,000 மூட்டைகளுக்கு முன்பதிவு இருந்தால் மட்டுமே, லாரிகள் வாயிலாக சிமென்ட் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், முன்பதிவு செய்து பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான கட்டடம் கட்டுவோர், தனியார் கடைகளில் சிமென்ட் மூட்டைகளை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரி கூறியதாவது:
அரசு தொகுப்பு வீடுகள் கட்டுவோருக்கு, குறைந்தளவில் சிமென்ட் மூட்டைகள் வழங்குவதால், பயனாளிகள் முன்பதிவு செய்வதில்லை.
அப்படி முன்பதிவு செய்திருந்தாலும், லாரிகள் வாயிலாக, 2,000 மூட்டைகள் கொண்டு வந்தால் தான் வாடகை கட்டுப்படியாகிறது.
இந்த மூட்டைகள் பதிவு செய்வதற்கு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதால், பயனாளிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஐந்து மாதங்களாக மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு சிமென்ட் மூட்டைகள் கொண்டு வரப்படவில்லை.
அரசும் சிமென்ட் மூட்டைகளை குறைந்த அளவிலேயே வழங்கி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு தொகுப்பு வீடுகள் கட்டுவோருக்கு கூடுதல் சிமென்ட் மூட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.