/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியாருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் தரைப்பாலத்தில் மண் மட்டும் அகற்றம்..
/
தனியாருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் தரைப்பாலத்தில் மண் மட்டும் அகற்றம்..
தனியாருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் தரைப்பாலத்தில் மண் மட்டும் அகற்றம்..
தனியாருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் தரைப்பாலத்தில் மண் மட்டும் அகற்றம்..
ADDED : ஏப் 29, 2024 06:38 AM

குன்றத்துார்: குன்றத்துார் அருகே கொல்லச்சேரியில், தனியார் கட்டுமான பணிக்காக, கால்வாய் தரைப்பாலம் மண் கொட்டி மூடப்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, மூடப்பட்ட தரைப்பாலத்தின் கீழ் உள்ள மண் மட்டும், கடமைக்காக அகற்றப்பட்டுள்ளது.
குன்றத்துார் - போரூர் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே கொல்லச்சேரி பகுதியில், 20 அடி அகலத்தில் ஐந்து கண் தரைப்பாலம் உள்ளது.
மழைக்காலத்தில் கொல்லச்சேரி, மலையம்பாக்கம், சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம் ஆகிய பகுதிகளில் தேங்கும் வெள்ள நீர், இந்த ஐந்து கண் தரைப்பாலம் வழியே வெளியேறும்.
இந்நிலையில், இந்த ஐந்து கண் தரைப்பாலம் அருகே, தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடக்கிறது. இதற்காக, ஐந்த கண் பாலம் மற்றும் அதன் அருகே இருந்த கால்வாய் மண் கொட்டி மூடப்பட்டது. இதை அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால், மழைக்காலங்களில் கொல்லச்சேரி, மலையம்பாக்கம் சுற்றியுள்ள பகுதியில், குடியிருப்பில் வெள்ளநீர் சூழும் ஆபத்து உள்ளது.
இதனால், அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன், கடந்த 25ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து பொதுப்பணித் துறையினர் கடமைக்காக, ஐந்து கண் பாலத்தின் அடிப்பகுதியில் கொட்டப்பட்ட மண்ணை மட்டும் அகற்றியுள்ளனர்.
நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மொத்தம் 500 மீட்டர் துாரத்திற்கு, 20 அடி அகலத்தில் இருந்த கால்வாய் வழித்தடமே காணவில்லை. கால்வாயை மூடிய தனியாருக்கு ஆதரவாக, அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
இந்த பகுதியில் கால்வாய் எவ்வளவு அகலத்தில், எவ்வளவு துாரத்தில் உள்ளது என, வருவாய்த் துறை மூலம் நிலம் அளவீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

