/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி கூரை இடிந்து விழுந்தது
/
அரசு பள்ளி கூரை இடிந்து விழுந்தது
ADDED : ஜூலை 11, 2024 01:25 AM

திருத்தணி,:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி முருகப்பநகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ- -மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
மாலை 4:20 மணிக்கு பள்ளி முடிந்ததும், அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு சென்றனர்.
மாணவர்கள் பள்ளியை விட்டு சென்ற சிறிது நேரத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பறை படிக்கும் மாணவர்கள் அமரும் பள்ளி கட்டடத்தின் கூரையில் இருந்து சிமென்ட் தளம் பெயர்ந்து வகுப்பறையில் விழுந்தது.
இதில் வகுப்பறையில் இருந்த பிளாஸ்டிக் சேர் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் வீட்டிற்கு சென்றதும் கூரை இடிந்து விழுந்ததில் சேதம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டார கல்வி அலுவலர் சலபதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சேதம் அடைந்த கூரை தளத்தை பார்வையிட்டனர். உடனடியாக கூரை சீரமைப்பதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கல்வி அலுவலர் பரிந்துரை செய்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
அந்த பள்ளியில், 68 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இரு கட்டடங்கள் உள்ளன. அதில் ஒரு கட்டடம், 50 ஆண்டுகள் பழைய, சீமை ஓடு மேற்கூரை கட்டடமாகும்.
அந்த கட்டத்தை இடித்து புதிய வகுப்பறை நிறுவவேண்டும் என பெற்றோர், கிராம மக்கள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிய கட்டடம் கோரியும், பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரவீன்குமாரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று பொற்றோர் சார்பில் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., சந்திரசேகர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பழைய பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்தார். சமாதானம் அடைந்த பெற்றோர் கலைந்து சென்றனர்.