/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுார் தடுப்பணையில் தேங்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர்... பாதிப்பு கழிவுகளை வெளியேற்ற 'ஷட்டர்' அமைக்காததால் பிரச்னை
/
புட்லுார் தடுப்பணையில் தேங்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர்... பாதிப்பு கழிவுகளை வெளியேற்ற 'ஷட்டர்' அமைக்காததால் பிரச்னை
புட்லுார் தடுப்பணையில் தேங்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர்... பாதிப்பு கழிவுகளை வெளியேற்ற 'ஷட்டர்' அமைக்காததால் பிரச்னை
புட்லுார் தடுப்பணையில் தேங்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர்... பாதிப்பு கழிவுகளை வெளியேற்ற 'ஷட்டர்' அமைக்காததால் பிரச்னை
ADDED : மார் 10, 2025 12:14 AM

திருவள்ளூர் நகராட்சி சுத்திகரிப்பு மையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், புட்லுார் தடுப்பணையில் சேகரமாவதால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. கழிவுநீரை வெளியேற்றும் வகையில், தடுப்பணையில் கதவணை அமைக்காததால், இந்த பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது.
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு உருவாகிறது. இந்த ஆறு, பேரம்பாக்கம், கடம்பத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல், திருவேற்காடு வழியாக, 72 கி.மீ., பயணித்து, சென்னை நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
கூவம் ஆற்றில் மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் காரணமாக, ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்தால் கூவம் ஆற்று நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இருப்பினும், மழைக்காலத்தில் தண்ணீரை சேகரிக்க கூவம் ஆற்றில், கடந்த 2016ம் ஆண்டு, 5.89 கோடி ரூபாய் மதிப்பில் புட்லுார் அருகே தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில், ஆண்டுதோறும் பருவமழையின்போது, கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இதனால், புட்லுார், வெங்கத்துார், ஒண்டிக்குப்பம், மணவாள நகர் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், புட்லுார் தடுப்பணை அருகே உள்ள மணவாளநகர், ஒண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் உணவகம், கடைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கூவம் ஆற்றில் நேரடியாக விடப்படுகிறது.
மேலும், திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து, கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், நேரடியாக புட்லுார் ஆறு வழியாக, கூவம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதனால், கூவம் ஆற்று தடுப்பணையில் கழிவுநீர் கலந்த நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், புட்லூர், ஒண்டிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதற்கு, கூடுதல் தண்ணீரை வெளியேற்ற, 'ஷட்டர்' அமைக்காததே காரணம் என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து புட்லுார் சமூக ஆர்வலர் செந்தில் குமார் கூறியதாவது:
புட்லுார் தடுப்பணையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது. இதற்கு பிரதான காரணம், திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல், கூவம் ஆற்றில் நேரடியாக வெளியேற்றி வருவது தான்.
மேலும், அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், இந்த தடுப்பணையில் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக, தடுப்பணையை சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, கழிவுநீரை சுத்திகரித்து, குழாய் வாயிலாக புட்லுார் ஏரியில் விட வேண்டும் என, பசுமை தீர்ப்பாயத்திற்கு மனு அளித்தேன். தீர்ப்பாயமும், 2022ம் ஆண்டு அதற்கான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், தற்போது வரை கடைப்பிடிக்கவில்லை.
இதுகுறித்து மீண்டும் பசுமை தீர்ப்பாயத்திற்கு மனு அனுப்பி உள்ளேன். மேலும், புட்லுார் தடுப்பணையில் கதவணை அமைத்து, கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் எனவும், பொதுப்பணித் துறைக்கு மனு அனுப்பி உள்ளேன்.
ஆனால், அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக மாசடைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புட்லுார் தடுப்பணை, மழைநீரை சேமிப்பதற் காகவே கட்டப்பட்டது. அதனால், தடுப்பணை கட்டும் போது, உபரி நீரை வெளியேற்றும் வகையில் கதவணை அமைக்கப்படவில்லை. தற்போது, கழிவுநீர் கலந்து, தடுப்பணை யில் தேங்கிய நீர் மாசடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப் பட்டு உள்ளது. அரசு சிறப்பு நிதி ஒதுக்கி தந்தால், தடுப்பணை யில் கதவணை கட்டப்படும்.
பொதுப்பணித் துறை அதிகாரி,
திருவள்ளூர்.

