/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்களமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
நெற்களமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 12, 2024 12:42 AM

கடம்பத்துார்:தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாளாக உள்ளது.
இங்கு விளைநிலங்களில் விளைவிக்கப்படும் நெல்மணிகளை உலர வைப்பதற்கு, அமைக்கப்பட்ட இரு நெற்களங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால்,சேதமடைந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளன.
இதனால், விவசாயிகள் நெல் மணிகளை நெடுஞ்சாலையில் உலர வைப்பதால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகிறது.
எனவே, ஊராட்சியில் உள்ள நெற்களங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நெடுஞ்சாலையில் நெல் மணிகளை உலர வைப்பதை தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூளை லாரியால் புழுதி
பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, கம்மார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் செங்கல் சூளைகள் இயங்குகின்றன. இவற்றிற்கு குவாரிகளில் இருந்து களிமண், சவுடு உள்ளிட்டவையும், மீஞ்சூர் அடுத்த செப்பாக்கம் பகுதியில் இருந்து சாம்பல் கழிவுகளும் டிப்பர் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
லாரிகளில் மண் மற்றும் சாம்பல் கழிவுகள் அதிக சுமையுடன் குவித்து எடுத்து வரப்படுகிறது. சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் பள்ளங்களை கடக்கும்போது, லாரிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண் மற்றும் சாம்பல் கழிவுகள் சிதறி விழுகின்றன.
சாலைகளில் ஆங்காங்கே குவியல் குவியலாக இருக்கும் இவை காற்றிலும், மற்ற வாகனங்கள் செல்லும்போதும் புழுதியாக பறக்கிறது.
இதனால் சாலையோரங்களில் வசிக்கும் கிராமவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
வீட்டில் இருக்கும் உணவு மற்றும் உடமைகள் புழுதியால் துாசிபடிந்து பாழாகி வருவதுடன், கிராமவாசிகள் சுகாதார பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கண்ணிலும் புழுதி படிந்து தடுமாற்றம் அடைகின்றனர்.
செங்கல் சூளைகளுக்கு மண் மற்றும் சாம்பல் கழிவுகளை கொண்டு செல்லும் லாரிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

