/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிறந்த 8 நாளில் நீர்யானை குட்டி இறப்பு
/
பிறந்த 8 நாளில் நீர்யானை குட்டி இறப்பு
ADDED : ஆக 31, 2024 11:29 PM

தாம்பரம்: வண்டலுார் பூங்காவில், பிறந்து எட்டு நாட்களே ஆன நிலையில் நீர்யானை குட்டி திடீரென இறந்தது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஐந்து பெண், இரண்டு ஆண் என, ஏழு நீர்யானைகள் உள்ளன. இவை, தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பிரகுர்த்தி என்று பெயரிடப்பட்ட பெண் நீர்யானை, எட்டு மாத கர்ப்பத்திற்கு பின் ஆக., 21ல் குட்டி ஈன்றது.
தாயும், குட்டியும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. நீர்யானையின் குட்டியை, பூங்கா நிர்வாகம், ஆக., 25ல் வெளியிட்டது.
அதைதொடர்ந்து, அடுத்த நாள், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வண்டலுார் உயிரியில் பூங்காவிற்கு வந்து நீர்யானை குட்டியை பார்வையிட்டு சென்றார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை, நீர்யானை குட்டி திடீரென இறந்தது.
நீர்யானை குட்டியின் உடல், பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
நீர்யானை குட்டியின் திடீர் இறப்புக்கான காரணம் வெளிடப்படவில்லை.
பிறந்து எட்டே நாட்களில் நீர்யானை குட்டி இறந்த சம்பவம், விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் கூறியதாவது:
பிரகுர்த்தி நீர்யானை, இதற்கு முன் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. அவை அனைத்தும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. அப்படியிருக்கையில், ஆறாவதாக ஈன்ற குட்டி, திடீரென இறந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்யானை குட்டி பராமரிக்கும் கூண்டில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீரை மாற்ற வேண்டும். நீர்யானைகள் விடப்பட்டுள்ள கூண்டில் உள்ள தண்ணீர் பாசி படிந்து நாற்றம் அடிப்பதால், அதன் பராமரிப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பூங்கா உதவி இயக்குனரை தொடர்பு கொண்டபோது, வெளியூரில் இருப்பதாகவும், விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.