/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றில் அமையும் தடுப்புச்சுவர் தரம் எப்படி?...தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
/
ஆரணி ஆற்றில் அமையும் தடுப்புச்சுவர் தரம் எப்படி?...தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
ஆரணி ஆற்றில் அமையும் தடுப்புச்சுவர் தரம் எப்படி?...தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
ஆரணி ஆற்றில் அமையும் தடுப்புச்சுவர் தரம் எப்படி?...தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
ADDED : மே 18, 2024 10:25 PM

பொன்னேரி: வெள்ளப்பெருக்கு காலங்களில், ஆரணி ஆற்றில் ஏற்படும் கரை உடைப்புகளை தவிர்க்க அமைக்கப்படும், கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டுமானத்திற்கு, தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதாகவும், தடுப்பு சுவரின் தரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோமஞ்சேரி கிராமத்தின் வழியாக ஆரணி ஆறு பயணிக்கிறது.
இங்குள்ள ஆற்றின் கரைகள் பலவீனமாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும், வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகள் உடைப்பு ஏற்படுகிறது.
உடைப்புகள் வழியாக ஆற்று நீர் சோமஞ்சேரி, தத்தமஞ்சி, அத்தமஞ்சேரி ரெட்டிப்பாளையம் கிராமங்களை மூழ்கடிக்கிறது.
இதனால் கிராமவாசிகள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். விவசாய நிலங்களும் ஆற்று நீரில் மூழ்கி, வடிவதற்குள் அவை அழுகி வீணாகின்றன.
வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் அதிகாரிகள், தற்காலிக தீர்வாக உடைப்பு ஏற்படும் பகுதிகளில் மணல் மூட்டைகளை கட்டி போடுகின்றனர்.
அடுத்துவரும் மழைக்கு அவை அரித்து செல்லப்பட்டு கரைகள் உடைவது தொடர்கிறது. கடந்த, ஐந்து ஆண்டுகளாக கரைகளில் உடைப்பு ஏற்படுவதும், மணல் மூட்டைகளை போடுவதும் தொடர்கிறது.
தற்காலிக தீர்வாக மணல் மூட்டைகள் கட்டி போடப்படுவது பயன்தராது எனவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள், கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
தொடர் கோரிக்கையின் பயனாக தற்போது, தத்தமஞ்சி, சோமஞ்சேரி, பெரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில், பலவீனமாக உள்ள வளைவுபகுதி கரைகளை பலப்படுத்தும் பணிகளில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தத்தமஞ்சி கிராமத்தில், 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்படுகிறது. அங்கு, 500மீ நீளம், 7 மீ. உயரத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணி நடைபெறுகிறது.
அதேபோன்று, சோமஞ்சேரி கிராமத்தில், 16 கோடி ரூபாயில், 520 மீ., நீளத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான அடித்தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், சோமஞ்சேரி கிராமத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்கு தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதால் தடுப்பு சுவர் தரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கிராமவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
சோமஞ்சேரி கிராமவாசிகள் சிலர் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று, பணிமேற்கொள்பவர்களிடம் கேட்டனர். தொடர்ந்து கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒப்பந்த பணியாளர்களிடம் இருந்து சரியான பதில் இல்லாத நிலையில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கே.செல்லப்பன் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் கரை உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மூழ்கி, ஒரு ஏக்கருக்கு , 30,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. எங்களது உடைகளை இழக்கிறோம்.
கிராமவாசிகள், விவசாயிகள் நலன்கருதி தமிழக அரசு நிதி ஒதுக்கி, தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லை.
கட்டுமான பணிகளுக்கு ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட சவுடு மண் கலந்த மணல், சாம்பல் கலந்த எம்-சாண்ட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
தரமான இரும்பு கம்பிகளை பயன்படுத்தவில்லை. இதனால் இரும்பு கம்பிகள் விரைவில் துருப்பிடித்துவிடும். தரமின்றி தடுப்பு சுவர் அமைத்தால் எத்தனை ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும். அதிகாரிகள் கட்டுமான பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சவுடு மண் பயன்படுத்தவில்லை. தரமான எம்-சான்ட் மற்றும் இரும்பு கம்பிகள் தான் பயன்படுத்தி கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது.
பொருட்களின் தரம் குறித்தும் தரக்கட்டுப்பாட்டு குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இந்த ஆண்டு மழைக்காலத்தின்போது, வெள்ளபாதிப்புகளை தவிர்க்க துரிதமாக பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தினால் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியும். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கிராமவாசிகள் புகார் குறித்தும் ஆய்வு செய்து, அதில் உண்மை தன்மை இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

