/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் கோவிலை தவிர வேறொன்றுமில்லை அடிப்படை வசதி இல்லாமல் அல்லல்படும் பகுதியினர்
/
திருவாலங்காடில் கோவிலை தவிர வேறொன்றுமில்லை அடிப்படை வசதி இல்லாமல் அல்லல்படும் பகுதியினர்
திருவாலங்காடில் கோவிலை தவிர வேறொன்றுமில்லை அடிப்படை வசதி இல்லாமல் அல்லல்படும் பகுதியினர்
திருவாலங்காடில் கோவிலை தவிர வேறொன்றுமில்லை அடிப்படை வசதி இல்லாமல் அல்லல்படும் பகுதியினர்
ADDED : மார் 23, 2024 10:10 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் இங்கு, 42 ஊராட்சிகளில் 1 லட்சத்து 50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஊர் பெயர் திருவாலங்காடு என்பதால் என்னவோ, ஊரை சுற்றி காடாகவே உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை மட்டுமே உள்ளது.
அதேபோல் அறநிலையத்துறைக்கு சொந்தமான திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு செல்வோர் போக்குவரத்து வசதியின்றி புலம்புகின்றனர். ஊரின் மையப்பகுதியில் கோவில் மட்டுமே உள்ளது. வேறு எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லை.
சிரமம்@@
இங்குள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, 25 கி.மீ., தொலைவிலுள்ள திருவள்ளூர் அல்லது 70 கி.மீ., தொலைவிலுள்ள சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இங்குள்ள இளைஞர்கள் வேலைக்கு ஸ்ரீபெரும்புதுார், அம்பத்துார், ஒரகடம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கின்றனர்.
அதேபோல் கல்லுாரி, மருத்துவமனைக்கு திருவள்ளூர், சென்னை நகரங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் சென்றுவர போக்குவரத்து வசதி இல்லாததால் பெண்கள், இளைஞர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
பக்கத்து டவுனுக்கு செல்ல வேண்டுமென்றாலும் ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகாவிற்கு 15 கி.மீட்டர் செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து திருவாலங்காடு பகுதி இளைஞர்கள் கூறியதாவது:
மாவட்டத்தில் தொழில்வளர்ச்சி குன்றிய ஒன்றியம் திருவாலங்காடு. இளைஞர்கள் நலன் கருதி திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரத்தில் சிட்கோ அமைப்பதாக சட்டசபையில், 2021ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதுவரை அமைந்தப்பாடில்லை.
நேர விரயம்
இளைஞர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து, 30 - -60 கி.மீ., தொலைவில் உள்ள நகரங்களுக்கு வேலைக்கு சென்று வருவதால் நேர விரயம், அலைச்சல் காரணமாக பல நாட்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருக்கின்றனர். அவ்வாறு இருப்பவர்கள் நாளடைவில் போதைப்பழக்கத்திற்கு உள்ளாகி சீரழிந்து வருகின்றனர். மேலும் தற்போது தரமான சாலைகள் உள்ளபோதும் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
திருவாலங்காடு வழியாக 10 ஆண்டுகளுக்கு முன் 20க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயங்கப்பட்டு வந்தன. தற்போது 105சி, டீ4, டீ2, என மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதனால், போக்குவரத்தின்றி கல்வி, வேலை மருத்துவமனைக்கு செல்வோர் தவிக்கின்றனர்.
திருவாலங்காடு பகுதி திருத்தணி தாலுகாவின் கீழ் வருகிறது. இங்குள்ள மக்கள் வருவாய் ஆவணங்கள் சான்றிதழ் பெறுதல் பட்டா தொடர்பான தகவல் பெற 30 -- - 45 கி.மீ., தொலைவிலுள்ள திருத்தணிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், அவர்கள் போக்குவரத்து இன்றி சிரமப்படுவதுடன் பணச்செலவு அதிகரிப்பதாகவும் தாலுகா அலுவலகம் சென்று வர ஒருநாள் முழுதும் செலவழிப்பதாக புலம்புகின்றனர்.
இதனால், இப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகள் கூட இன்றி அல்லல் படுகிறோம். தற்போதைய அரசு அரசியல்வாதிகள் கருத்தில் கொண்டு, திருவாலங்காடு ஒன்றிய மக்களின் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

