/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் நெல் அறுவடை பணி தீவிரம்
/
பொன்னேரியில் நெல் அறுவடை பணி தீவிரம்
ADDED : ஆக 29, 2024 11:31 PM

பொன்னேரி:மீஞ்சூர் வேளாண் வட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி, சின்னகாவணம், தேவராஞ்சேரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் இருப்பதால், அப்பகுதிகளில் ஆழ்துளை மோட்டார்கள் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது.
கடந்த, மே, ஜூன் மாதங்களில் சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயிகள் நெல் பயிரிட்டனர். இந்த பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. மீஞ்சூர் வட்டாரத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு மொத்தம், 14,500 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது மழை பொழிவு இருந்ததால், நெற்பயிர்கள் சீரான வளர்ச்சியை பெற்றன.
தற்போது அவை அறுவடைக்கு தயாராகி உள்ளன. ஒரு சில கிராமங்களில் இயந்திரங்கள் உதவியுடன் அறுவடை பணிகளும் நடைபெறுகிறது.
நோய் மற்றும் பூச்சி தாக்குதல் பாதிப்புகள் இன்றி வளர்ந்ததால் எதிர்பார்த்த மகசூல் கிடைத்து உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
அடுத்த, 15 தினங்களுக்குள் அனைத்து கிராமங்களிலும் அறுவடை பணிகளை முடித்து, சம்பா பருவத்திற்கு தயாராகி விடுவோம். அதுவரை மழைபொழிவு இல்லையென்றால், பாதிப்புகள் இன்றி அறுவடை செய்துவிடலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.