/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாட்டு மரங்களை கைவிடுகிறதா நெடுஞ்சாலை துறை? சாலையோரம் நடப்படும் வெளிநாட்டு மரங்கள்!
/
நாட்டு மரங்களை கைவிடுகிறதா நெடுஞ்சாலை துறை? சாலையோரம் நடப்படும் வெளிநாட்டு மரங்கள்!
நாட்டு மரங்களை கைவிடுகிறதா நெடுஞ்சாலை துறை? சாலையோரம் நடப்படும் வெளிநாட்டு மரங்கள்!
நாட்டு மரங்களை கைவிடுகிறதா நெடுஞ்சாலை துறை? சாலையோரம் நடப்படும் வெளிநாட்டு மரங்கள்!
ADDED : மே 14, 2024 04:16 AM

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி சாலை விரிவாக்கத்திற்காக, சாலையோரம் இருந்த புளியன் உள்ளிட்ட நாட்டு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அதற்கு பதிலாக 10,000 மரங்களும், வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் 7,000 மரக்கன்றுகளும் நடப்பட்டு உள்ளன.
சாலை ஓரம் நடப்படும் இவ்வகை மரங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. அதிக வெப்பத்தை வெளியேற்றும் மரங்களாக இவை உள்ளன.
குறிப்பாக, கோனோ கார்பஸ், டபிபியா, சீமை வேலிகாத்தான் ஆகிய மரங்கள் தான் உள்ளன. இந்த மரங்கள் அதிக வெப்பத்தை உமிழ்வதால், அவ்வழியே வாகன ஓட்டிகள் செல்லும்போது, அதிக வெப்பத்தை உணர முடிகிறது. கோடைக் காலங்களில், மரத்தடியில் நிழலுக்கு நின்று ஓய்வு எடுக்க முடியாத சூழல் உள்ளது.
சாலையோரங்களில் நிழல் தரும் நாட்டு மரங்களை நடுவதற்கு, நெடுஞ்சாலை துறை அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பசுமை ஆர்வலர் எழில்சோலை மரம் மாசிலாமணி கூறியதாவது:
சாலை ஓரங்களில் நடப்படும் மரங்கள், அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவையாக உள்ளன. இது, வெயில் காலங்களில் அதிக வெப்பத்தை வெளியேற்றும். சாலையில் செல்லும் மனிதர்கள் மட்டுமல்லாமது பறவையினங்களும் பாதிக்கப்படுகின்றன.
இதை தவிர்க்க, சாலை ஓரங்களில் நாவல், புளியன், மகிழம், மந்தாரை, சாரக்கொன்றை, தான்றிக்காய், பாதாம், வெண் கடம்பம், கருமருது, மஞ்சள் கடம்பம், பூ மருது, புங்கன், வேம்பு, நீர் மருது ஆகிய மரங்களை நட வேண்டும். இது தொடர்பாக, கலெக்டரிடம் முறையாக மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வனத்துறையினர் பரிந்துரைக்கும் மரங்களை மட்டுமே வாங்கி சாலை ஓரங்களில் நடுகிறோம். இதில், கலப்பின மரக்கன்றுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
'சில மரங்களில் வித்தியாசமாக பூக்கள் பூப்பதால் என்ன மரம் என, பலரும் கேட்கின்றனர். அதை சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம், போட்டோ அனுப்பி அவர்களிடம் விபரம் கேட்டுள்ளோம்' என்றார்
.- நமது நிருபர் -

