/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
/
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
ADDED : மார் 05, 2025 08:03 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானைக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தற்போது, மாசி பிரம்மோற்சவம் மற்றும் கிருத்திகை விழாவை ஒட்டி, வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலில், பொதுவழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
அதேபோல், முருகன் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், காலை 8:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் கோவிலில், அதிகாலை, மதியம் மற்றும் இரவு என, மூன்று வேளைகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.