/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளைச்சல் குறைவால் எகிறிய மாம்பழம் விலை
/
விளைச்சல் குறைவால் எகிறிய மாம்பழம் விலை
ADDED : மே 07, 2024 06:36 AM

கடம்பத்துார்: பழங்களை பொறுத்தவரை ஏப்ரல், மே மாதம் என்றாலே மாம்பழம் தான் நினைவுக்கு வரும். மா மரங்களில் டிசம்பர் மாதத்தில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.
அதன்பின், பிப்ரவரியில் காய்கள் பிடிக்க ஆரம்பிக்கும்.
அதன்பின், ஏப்ரல் இறுதி முதல் மாம்பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வர ஆரம்பித்து, மூன்று மாதங்கள் சீசன் களை கட்டும்.
இதில், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் போளிவாக்கம், காந்திப்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையோர கடைகள் அமைத்து மாம்பழ விற்பனை அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கிய நிலையில், வரத்து குறைவால் விலை இரு மடங்குகளாக உயர்ந்துள்ளது. மாம்பழங்களின் முக்கிய ரகங்களான பங்கனப்பள்ளி, செந்துாரம், ருமானி போன்ற வகைகள் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.
ஆனால், தற்போது செந்துாரம், பங்கனப்பள்ளி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதில், பங்கனப்பள்ளி கிலோ 150 ரூபாய்க்கும், செந்துாரம் 130 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
இதுகுறித்து மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது எங்கள் பகுதியில் மாந்தோப்புக்கள் எல்லாம் பெரும்பாலும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு கிடங்காக மாறி வருகிறது.
'இதனால், பல தோப்புகளில் மாமரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மேலும், விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லாமல் குறைவாக உள்ளது' என்றார்.