/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காற்றில் சாய்ந்த நெற்பயிர்கள் மீஞ்சூர் விவசாயிகள் கவலை
/
காற்றில் சாய்ந்த நெற்பயிர்கள் மீஞ்சூர் விவசாயிகள் கவலை
காற்றில் சாய்ந்த நெற்பயிர்கள் மீஞ்சூர் விவசாயிகள் கவலை
காற்றில் சாய்ந்த நெற்பயிர்கள் மீஞ்சூர் விவசாயிகள் கவலை
ADDED : செப் 08, 2024 12:59 AM

பொன்னேரி:மீஞ்சூர் வேளாண் வட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி, சின்னகாவணம், தேவராஞ்சேரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சொர்ணவாரி பருவத்திற்கு, 14,500 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளன.
சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற, என்.எல்.ஆர்., டிகேஎம் 9, 1638, 1010, 1256, ரூபாலி ஆகிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது மழை பொழிவு இருந்ததால், நெற்பயிர்கள் சீரான வளர்ச்சியை பெற்றன.
அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாரான நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்தது.
இதில், நன்கு வளர்ந்திருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்து கிடக்கின்றன. இதனால் எதிர்பார்த்த மகசூல் மற்றும் வருவாய் கிடைக்காது என்பதை எண்ணி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஓரிரு நாளில் அறுவடை பணிகள் துவங்க திட்டமிட்டிருந்தோம். இந்த பருவத்தில் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்திருந்தன. வழக்கத்தைவிட கூடுதலான மகசூல் கிடைக்கும் என, நம்பியிருந்தோம்.
திடீர் மழை பொழிவால் நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. இவற்றை இயந்திரத்தின் உதவியுடன் அறுவை செய்யும்போது, நெல்மணிகள் அதிகளவில் சிதைந்து வீணாகும். இதனால் மகசூல் குறையும். வியாபாரிகளும் இதுபோன்ற நெல்லை குறைந்து விலைக்கு கேட்பர்.
இது விவசாயத்திற்கு செலவிட்ட தொகைக்கும் குறைவான வருவாயை தரும். திடீர் காற்று மழையால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் உரிய நிவாரணம் வழங்க அரசு முன்வரவேண்டும். அதை கொண்டுதான் சம்பா பருவ விவசாயத்திற்கு தயாராக முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.