/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் வேகத்தடை வாகன ஓட்டிகள் அச்சம்
/
நெடுஞ்சாலையில் வேகத்தடை வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மே 25, 2024 01:26 AM

பள்ளிப்பட்டு:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், நாதன்குளம் பகுதியில், பார்வைக்கு புலப்படாத சாலை திருப்பம் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடந்து வந்தன. இதையடுத்து, இந்த பகுதியில் கடந்த மார்ச் மாதம், இரண்டு வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமூகவிரோதிகள் இதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திய சம்பவம், வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாதன்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளை கடந்து செல்லும் வாகனங்கள், வேகத்தை குறைத்து கடக்க வேண்டிய நிலை உள்ளது.
இதை கவனித்த சமூகவிரோதிகள் இருவர், சமீபத்தில், நள்ளிரவில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த வேன் ஓட்டுனரை வழி மறித்து, பணம் கேட்டு மிரட்டினர். அவர், பணம் இல்லை என்றதும், அந்த கொள்ளையர்கள், கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். ஆபத்தான நிலையில் அந்த வேன் ஓட்டுனர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இரவு நேரத்தில், பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து வருகின்றனர். வேகத்தடைகளுக்கு மாற்றாக,‛வார்ம் அப்' தடைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் வாயிலாக வாகனங்களின் வேகத்தை குறைக்காமல், சாலை திருப்பத்தை உணர்ந்து செயல்பட முடியும்.

