/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம்: அமைச்சர்
/
நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம்: அமைச்சர்
ADDED : ஆக 14, 2024 09:24 PM
திருவள்ளூர்:''திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் நேரு உறுதியளித்தார்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்.
நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தனர்.
பின், அமைச்சர் நேரு பேசியதாவது:
தமிழக முதல்வர் நகராட்சி துறைக்காக மட்டும், ஆண்டுதோறும் 24,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறார். அதனால் தான், திருவள்ளூர் நகராட்சிக்கு 75 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக, முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி, திருத்தணி மற்றும் திருவள்ளூர் நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திருவள்ளூர் - ராஜேந்திரன், திருத்தணி சந்திரன், நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.