/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உப்பரபாளையம் பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பு
/
உப்பரபாளையம் பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பு
ADDED : ஏப் 10, 2024 09:21 PM

பொன்னேரி:பொன்னேரி உப்பரபாளையம் பகுதியில் புதியதாக வீட்டுமனைப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அங்கு ஏரளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
புதிதாக அமைந்துவரும் குடியிருப்பு பகுதிக்கும், ஏற்கனவே இங்குள்ள, 300க்கும் அதிகமான குடியிருப்புகளுக்கும் தடப்பெரும்பாக்கம் சாலையில் உள்ள இரண்டு மின்மாற்றிகள் வாயிலாக மின் வினியோகம் நடைபெற்றது.
இது போதுமானதாக இல்லாமல், மின்மாற்றிகள் அடிக்கடி பழுதடைந்து இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டது.
புதிதாக உருவாகும் குடியிருப்பு பகுதிக்கு தனி மின்மாற்றி பொருத்த திட்டமிடப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன், மின்கம்பங்கள் மற்றும் இரும்பு தளவாடங்கள் பொருத்தப்பட்டன. மேற்கொண்டு எந்தவொரு பணிகளும் நடைபெறாமல் இருந்தன.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதையடுத்து மின்மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று முதல் அது பயனுக்கு கொண்டு வரப்பட்டது.
புதிய மின்மாற்றி வாயிலாக, புதிதாக அமைந்துவரும் குடியிருப்பு பகுதிகளுக்கு மின் வினியோகம் வழங்கப்படுகிறது.
பழுதடைந்த மின்கம்பம்
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, கொய்யாத்தோப்பு பகுதியில் 1,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊத்துக்கோட்டையில் உள்ள மின்வாரிய துணைமின் நிலையத்தில் இருந்து மின்கம்பத்தில் உள்ள கம்பி வாயிலாக மின்சாரம் செல்கிறது.
கொய்யாத்தோப்பு பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது. சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பி தெரிகிறது. எப்போது உடைந்து கீழே விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெரிய அளவில் சேதம் ஏற்படும் முன், கொய்யாத்தோப்பு பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

