/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட எதிர்ப்பு
/
தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட எதிர்ப்பு
தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட எதிர்ப்பு
தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட எதிர்ப்பு
ADDED : மே 10, 2024 01:07 AM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த சின்னகாவணம் கிராமத்தில், தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. இதன் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கான குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்கு நிலம் அளவீடு செய்வதற்காக நேற்று வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர். இதையறிந்த கிராமவாசிகள், அங்கு குவிந்து, 'இப்பகுதி தாமரைகுளம் நீர்நிலைப்பகுதியாகும், இங்கு குடியிருப்புகள் கட்டக்கூடாது' எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிராமவாசிகள் கூறியதாவது:
கடந்த, 1997ல், தாமரைக்குளத்திற்கு உண்டான, ஆறு ஏக்கர் நிலத்தில், மூன்று ஏக்கரை நிலத்தின் வகைப்பாட்டை கிராம நத்தமாக மாற்றி, தீயணைப்பு நிலையத்திற்கு ஒதுக்கினர்.
நீர்நிலையின் வகைப்பாடு மாற்றியதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். தீயணைப்புத்துறையினர் இங்கு எந்தவொரு கட்டடமும் அமையாது என கூறியிருந்தனர்.
தற்போது குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்படுகிறது. பல ஆண்டுகளாக கிராமவாசிகளின் விவசாய பயன்பாட்டிற்கும், கோவில் திருவிழாக்களுக்கும் இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து, 'நீர்நிலையை எப்படி நிலவகைப்பாடு மாற்றினீர்கள் எனக்கேட்டு, வருவாய்த்துறையினரிடம் கிராமவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த பொன்னேரி தாசில்தார் மதிவாணன், கிராமவாசிகளிடம் 'நிலம் அளவீடு செய்துதர தங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அப்பணிகளை செய்ய அனுமதியுங்கள்' என கேட்டார்.
கிராமவாசிகள் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்ததால், சம்மன் அனுப்பும்போது உரிய ஆவணங்களுடன் அலுவலகம் வரும்படி தெரிவிததுவிட்டு சென்றார். அதையடுத்து கிராமவாசிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.