/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியபாளையத்தில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அவதி
/
பெரியபாளையத்தில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அவதி
ADDED : ஜூலை 06, 2024 01:29 AM

பெரியபாளையம்:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பெரியபாளையம் ஊராட்சி. இங்கு பிரசித்தி பெற்ற பவானியம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சென்று அம்மனை தரிசனம் செய்வர்.
இங்கு நடைபெறும் விழாக்களில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது.
முதல் வார ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், டிராக்டர், மினிலாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை மாலை சென்று, அங்கேயே தங்கி, மறுநாள் காலை தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை தரிசனம் செய்வர்.
நெரிசல்
பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை சாலையில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள், கடைகளின் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அங்குள்ள சாலை சந்திப்பில் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நின்று பயணியரை ஏற்றிச் செல்கின்றனர். மேம்பாலத்தை கடந்து, சாலையின் இரு பக்கமும் கடைகள் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நிற்கின்றன.
இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, சாலை குண்டும்குழியுமாக உள்ளது.
தற்போது அடிக்கடி மழை பெய்வதால், இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதில் வாகனங்கள் செல்லும் போது, பள்ளத்தில் உள்ள சேறு கலந்த நீர் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மீது விழுகிறது.
குறிப்பாக, மாடுகள் அதிகளவில் திரிவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஆடி மாதம் துவங்கும் முன் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றி, சாலை சேதங்களை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.