ADDED : ஆக 21, 2024 12:28 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சின்ன நாகபூண்டி. சின்ன நாகபூண்டியில் இருந்து பெரிய நாகபூண்டிக்கு இணைப்பு சாலை உள்ளது.
பெரிய நாகபூண்டியில், நாகவல்லி உடனுறை நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில், ராகு பரிகார தலமாக அமைந்துள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள படவேட்டம்மன் கோவில் எதிரே குளம் ஒன்று உள்ளது. இந்தகுளத்தின் தெற்கு கரை, மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. நெடுஞ்சாலையோரம் உள்ள நீர்நிலைகளுக்கு, இரும்பு தடுப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
ஆனால், இந்த குளக்கரையில், எச்சரிக்கை பதாகை இல்லை. இரும்பு தடுப்புகளும் ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
எனவே இந்த குளக்கரையில் இரும்பு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.