/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் புதரில் மறைந்த மின்வாரிய அலுவலகம்
/
பொன்னேரியில் புதரில் மறைந்த மின்வாரிய அலுவலகம்
ADDED : ஆக 04, 2024 02:26 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில், துணைமின்நிலையம் அமைந்து உள்ளது.
பொன்னேரி நகரம், அனுப்பம்பட்டு, திருவேங்கிடபுரம், பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், சின்னகாவணம், உப்பளம், எலவம்பேடு என, 100க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் விவசாயம், வணிகம், குடியிருப்பு என, ஒரு லட்சம் மின்இணைப்புகள் உள்ளன. பயனீட்டாளர்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான அலுவலகம், அதே வளாகத்தில் உள்ளது. அதேசமயம் மின்கட்டணம் செலுத்த வருபவர்களுக்கான கவுண்டர்கள் அமைந்துள்ள பகுதி, திருவேங்கிடபுரம் அன்னை இந்திரா தெருவில் உள்ளது.
இங்குள்ள சிறிய இரும்பு கதவு வழியாக பயனீட்டாளர்கள் வந்து கவுண்டர்களில் மின்கட்டணம் செலுத்திவிட்டு செல்கின்றனர். பயனீட்டாளர்கள் கொண்டு வரும் வாகனங்கள், குறுகிய அந்த சாலையில் போக்குவரத்திற்குஇடையூறாக நிறுத்தப்படுகிறது.
கவுண்டர்கள் உள்ள பகுதிக்கும், அன்னை இந்திரா தெருவிற்கும் இடையே போதுமான இடவசதி இருந்தும், வேலி அமைக்கப்பட்டு இருப்பதால், வாகனங்களை உள்ளே விடமுடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட கவுண்டர்கள் அமைந்துள்ள பகுதி முழுதும் செடிகள் வளர்ந்து புதராக மாறி உள்ளது. புதரில் அலுவலகம் மறைந்து கிடப்பதால், மின்கட்டணம் செலுத்த வருபவர்கள் அங்கும் இங்கும் தேடி அலைகின்றனர். துணை மின்நிலைய வளாகம் முழுதும் இதே நிலை உள்ளது.
மின்கட்டணம் செலுத்தும் பகுதியில் உள்ள புதர்களை அகற்றவும், அங்கு வரும் பயனீட்டாளர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்தவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கேட்பாரற்ற கம்பம்
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பட்டரைபெரும்புதுார் அடுத்து அமைந்துள்ளது நாராயணபுரம் கிராமம். இங்கு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அனாமத்தாக போடப்பட்டு உள்ளது.
பட்டரைபெரும்புதுார், மஞ்சாகுப்பம், புதுார், எல்லப்பநாயுடுபேட்டை, ராமஞ்சேரி உள்ளிட்ட பல கிராமங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.
அந்த மின்கம்பத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மின்கம்பங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றாமல் விடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் சேதமடைந்த மின்கம்பங்கள் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மாற்றாக வரவழைக்கப்பட்ட மின்கம்பங்கள் கேட்பாரற்று அனாமத்தாக சாலையோரம் போடப்பட்டுள்ளது. இந்த புதிய மின்கம்பங்கள் மழையில் நனைந்து மண்மூடி, செடிகள் முளைத்து வருகிறது.
இதனால் மின்கம்பம் பலவீனமடைந்து வருகிறது. மின்வாரியம் வாயிலாக பல ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட மின்கம்பங்கள் வீணாகி வருவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த மின்கம்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.