/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்தடையால் உற்பத்தி பாதிப்பு சிறுதொழில் உரிமையாளர்கள் வேதனை
/
மின்தடையால் உற்பத்தி பாதிப்பு சிறுதொழில் உரிமையாளர்கள் வேதனை
மின்தடையால் உற்பத்தி பாதிப்பு சிறுதொழில் உரிமையாளர்கள் வேதனை
மின்தடையால் உற்பத்தி பாதிப்பு சிறுதொழில் உரிமையாளர்கள் வேதனை
ADDED : மே 23, 2024 11:54 PM

மாதவரம், மாதவரம் பகுதியில் சிறுதொழில்களில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இவற்றில், தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
குறிப்பாக, மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் மாசிலாமணி நகர், செகரட்டரியேட் ஆபீசர் காலனியில், பிளாஸ்டிக், மர பொருட்கள், இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி, வாகன டயர்கள் மறு சீரமைப்பு, லாரிகளின், 'பாடி' கட்டும் பட்டறைகள் என, 20க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இப்பகுதியில், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டிகளும், பராமரிப்பின்றி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளன.
இதனால், மழை காலத்தில் மின் விபத்துகளும், அதிக மின் அழுத்தம் அல்லது குறைந்த மின் அழுத்தம் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. எதிர்பாராத தீ விபத்துகளும் ஏற்படுகின்றன.
அதை சீரமைக்க, ஒவ்வொரு முறையும் மின் வாரிய ஊழியர்களுக்கு, 200 முதல் 500 ரூபாய் வரை, கொடுக்கும் நிலை உள்ளது. மின் தடை பிரச்னை ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடிப்பதால், பொருட்களின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
மேற்கண்ட சிறுதொழில் நிறுவனங்களுக்கு, 1 கி.மீ., துாரத்தில் உள்ள மின் மாற்றியில் இருந்து, மின் வினியோகம் கிடைக்கிறது. பகிர்ந்தளிக்கப்படும் அந்த மின்சக்தி, தொழில் நிறுவன பணிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே, தொழில் நிறுவனங்களுக்கு என, தனி மின்மாற்றி அமைக்க வேண்டும் என்ற, நிறுவன உரிமையாளர்களின் கோரிக்கை கிடப்பில் உள்ளது.
'தொழில் வளத்தை பாதிக்கும் மின் தடை பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண, தங்கள் பகுதிக்கென போதிய திறன் கொண்ட, தனி மின் மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு வருவாய் ஈட்டி தரும் சிறுதொழில் பாதிக்காதபடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்' என, நிறுவன உரிமையாளர்கள், மாதவரம் மின் வாரிய அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மின் தேவைக்கான மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறோம். அங்கு, மின் மாற்றி அமைக்க போதிய இடம் கிடைக்கவில்லை. கிடைத்தால், பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
மின் வாரியத்தினர்,
மாதவரம்
நாங்கள் முறைப்படி கட்டணம் செலுத்தி, தேவையான மின் இணைப்புகளை பெற்றுள்ளோம். ஆனால், மின் வாரியத்தினரின் அலட்சியத்தால் தொழில் பாதிக்கப்படுகிறது. நாங்கள் மட்டுமின்றி, எங்களை நம்பி உள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
நிறுவன உரிமையாளர்கள்