/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
/
கூவம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கூவம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கூவம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ADDED : மே 19, 2024 05:15 AM

திருவேற்காடு: கூவம் நதிக்கரையோரம், திருவேற்காடு பெருமாள் கோவில் தெருவில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த வீடுகள், கூவம் நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என, நீர்வள ஆதாரம் மற்றும் பூந்தமல்லி தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
இந்த குடியிருப்புகளை அகற்றுவதற்காக, வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு, பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம், வீடுகளை கணக்கெடுத்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் 'நோட்டீஸ்' ஒட்டினர்.
அங்கிருந்தோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்டோர், கண்களில் கருப்பு துணி கட்டி, அப்பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில், எந்த வெள்ளப் பாதிப்பும் ஏற்படவில்லை. இங்கு 26 பேருக்கு, கிராம நத்தமாக வகை மாற்றம் செய்து, பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 160 பேருக்கு கிராம நத்தம் பட்டா வழங்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு மீது, நேரில் சென்று ஆய்வு நடத்தி முடிவெடுக்கும்படி, பூந்தமல்லி தாசில்தாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் அதிகாரிகள், எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யாமல், குடியிருப்புகளை அகற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள வீடுகளை நாங்களே அகற்றித் தருகிறோம்.
இவ்வாறு பகுதிமக்கள் கூறினர்.

