/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் ஆட்டிறைச்சி கூடம் அமைக்க கோரிக்கை
/
பொன்னேரியில் ஆட்டிறைச்சி கூடம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 23, 2025 08:00 PM
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. மேலும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், போகி, தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், சாலையோரங்களில், ஏராளமான இறைச்சி கடைகள் போடப்படுகின்றன.
ஆடுகளை வெட்டுவதற்கு முன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பார்வையிட்டு, இறைச்சிக்கு தகுதியானது என, சான்று பெற வேண்டும். நகராட்சி முத்திரை பதித்த பின்னரே அவற்றை ஆட்டிறைச்சியாக்க வேண்டும். இதற்கென ஆட்டிறைச்சி கூடம் அமைந்திருக்க வேண்டும்.
பொன்னேரி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்கனவே ஆட்டிறைச்சி கூடம் இருந்தது. பாதாள சாக்கடை திட்டத்திற்கான கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதற்காக இடித்து அகற்றப்பட்டது. புதிய ஆட்டிறைச்சி கூடம் இதுவரை அமைக்கப்படாமல் இருக்கிறது.
தற்போது நகராட்சியில், ஆட்டிறைச்சி கூடம் இல்லாததால், மேற்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. கடைகள் மற்றும் சாலையோரங்களில் இறைச்சிக்காக வதம் செய்யப்படும் ஆடுகளின் உடல் தகுதி குறித்து எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளப்படாத நிலையில், பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
பொதுமக்களின் சுகாதாரம் கருதி, ஆட்டிறைச்சி கூடம் அமைத்து, சுகாதார ஆய்வாளரின் சான்று பெற்ற பின், அவற்றை இறைச்சிக்கு அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

