ADDED : மார் 09, 2025 02:59 AM
ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம் கச்சூர் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி வாசிகளின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது. மாணவர்கள், உயர்நிலை, மேல்நிலை கல்விக்கு, ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி ஆகிய அரசு பள்ளிகளில் சென்று பயில்கின்றனர்.
கல்லுாரி படிப்பிற்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் விளையாட இடமின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதுகுறித்து இளைஞர்கள் கூறியதாவது:
கச்சூர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் என, ஊத்துக்கோட்டை தாசில்தார், பூண்டி பி.டி.ஓ., கிராம சபை கூட்டம் ஆகியவற்றில் மனு அளித்தும், தற்போது வரை எவ்வித பலனும் இல்லை. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்கள் கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.