/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாய்கள் துரத்தி கடித்ததில் காயமடைந்த மான் மீட்பு
/
நாய்கள் துரத்தி கடித்ததில் காயமடைந்த மான் மீட்பு
ADDED : மே 14, 2024 10:51 PM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த புளியங்குண்டா, வேணுகோபாலாபுரம் காப்புக்காட்டில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த மான்கள் கோடையில் அங்குள்ள நீர்நிலைகள் வற்றியதால் நீருக்காக பழையனூர், ராஜபத்மாபுரத்தில் உள்ள குட்டைகளில் நீர் அருந்தி செல்கின்றன.
இந்நிலையில் நேற்று காலை 6:00 மணியளவில் நீருக்காக ராஜபத்மாபுரத்தில் உள்ள பொன்னியம்மன் குட்டையில் நீர் குடிக்க சென்ற 3 வயதுடைய பெண் மானை அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் துரத்தின.
ஐந்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் மானை கடித்தன. இதில் மானின் பின் கால் ஒன்று முழுதும் கட் ஆனது. மேலும் கழுத்து, மற்றும் உடலில் லேசான காயம் அடைந்தது. மானை நாய்கள் கடிப்பதை கண்ட அப்பகுதியினர் நாய்களை விரட்டி மானை காப்பாற்றினர்.
திருவாலங்காடு கால்நடை மருத்துவமனையில் மானுக்கு சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோடைக்காலம் துவங்கியது முதல் பாகசாலை, பொன்னாங்குளம், சின்னம்மாபேட்டை, வியாசபுரம் என திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மான்கள் சுற்றுவது தொடர்கிறது. மான்கள் சாலையை கடந்து செல்வது தொடர்வதால் விபத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே மான்களை காக்க தேவையான நடவடிக்கையை வனத்துறை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மான் தெருநாயால் கடித்து குதறப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காலை 6:20 மணிக்கு திருத்தணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து 8:20 மணிக்கு வந்து மானை மீட்டு சென்றனர்.

