ADDED : ஆக 31, 2024 11:16 PM

திருத்தணி: சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு அதிகளவில் கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் வாகன உரிமையாளர்களுக்கு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து இணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் மாதவன் ஆகியோர் உத்தரவுபடி விழிப்புணர்வு நிகழ்ச்சி பொன்பாடியில் நேற்று நடந்தது.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், கோகுலாகிருஷ்ணன் ரமேஷ், செந்தில்செல்வம் மற்றும் சுமேஷ் நாராயணன் ஆகியோர் பங்கேற்று , கனரக சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் பாரம் ஏற்றி செல்ல வேண்டும். வேக கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக் கூடாது, அனைத்து ஆவணங்களையும் நடப்பில் வைத்திருக்க வேண்டும்.
வாகன காப்பீடு பெறுவதற்கு அரசின் விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' போன்ற அறிவுரைகள் வழங்கினர்.