/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாக்கடை திட்டத்திற்காக தோண்டிய பள்ளங்களால் சாலைகள் படுமோசம்
/
சாக்கடை திட்டத்திற்காக தோண்டிய பள்ளங்களால் சாலைகள் படுமோசம்
சாக்கடை திட்டத்திற்காக தோண்டிய பள்ளங்களால் சாலைகள் படுமோசம்
சாக்கடை திட்டத்திற்காக தோண்டிய பள்ளங்களால் சாலைகள் படுமோசம்
ADDED : மார் 08, 2025 01:31 AM

பொன்னேரி,:பொன்னேரி நகராட்சியில் முதற்கட்டமாக, 62.82 கோடி ரூபாயில், 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், ‛மேன்ஹோல்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
இதில், பொன்னேரி - திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி - தச்சூர் மாநில நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை சேமிப்பு தொட்டிக்கு கொண்டு செல்வதற்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கழிவுநீர் சேமிப்பு தொட்டிகளில் இருந்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்வதற்கு மற்றொரு குழாய் பதிக்கப்பட்டுள்ளன. இதற்காக, இரண்டு கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளுக்காக இரண்டு ஆண்டுகளாக இரு மாநில நெடுஞ்சாலைகளிலும், பள்ளங்கள் தோண்டுவதும், அவற்றை அரைகுறையாக மூடிவதும் தொடர்கிறது. சாலைகள பள்ளங்களாகவும், கரடு முரடாகவும் மாறி, வாகன ஓட்டிகள் தினமும் தடுமாற்றத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
கனரக வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களை உரிய முறையில் சீரமைக்காததால், அவ்வப்போது இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்துகளில் சிக்கி வருகின்றன.
கடந்த ஜனவரி 24ல், பொன்னேரி - தச்சூர் சாலையில் பயணித்த உயர்கல்வி படிக்கும் மாணவி, பள்ளத்தில் தவறி விழுந்தபோது, பின்னால் வந்த கனரக வாகனத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை சந்திப்பு கரடு முரடாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி கீழே விழுகின்றனர். இதுபோன்று பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் மாநில நெடுஞ்சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகளின் சிரமங்கள் தொடர்கிறது.
எனவே, பொன்னேரி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, சாலைகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.