/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் லாரியை சிறை பிடித்து போராட்டம்
/
கழிவுநீர் லாரியை சிறை பிடித்து போராட்டம்
ADDED : செப் 02, 2024 11:14 PM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சியில் சோண்டி செல்லும் சாலையில், காலி மனைகளில் கழிவுநீர் லாரிகள் இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரும் கழிவுநீரை ஊற்றி வருகின்றனர்.
இதனால், அவ்வழியே வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பகுதிவாசிகள் துர்நாற்றத்தால் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காலை அப்பகுதிக்கு வந்த கழிவுநீர் லாரியை சிறைப்பிடித்து, திருப்பந்தியூர் பகுதிவாசிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கழிவுநீர் லாரியை ஓட்டி வந்தவர்கள் கழிவுநீரை அப்பகுதியில் கொட்டாமல் திரும்பி சென்றனர்.
மேலும் இனிமேல் இவ்வாறு கழிவுநீரை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என, பகுதிவாசிகள் எச்சரித்தனர்.
ஆனாலும் இந்த கழிவு நீர் லாரிகள் கடந்த ஓராண்டாக இரவு நேரங்களில் கழிவுநீரை கொட்டி வந்தனர். நேற்று காலை கழிவுநீர் கொட்ட வந்த லாரியை அப்பகுதியில், 100 நாள் பணி மேற்கொண்ட பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மப்பேடு போலீசார் கழிவுநீரை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.