/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோலார் விளக்குகள் பழுது மனோபுரத்தில் 'திக்... திக்'
/
சோலார் விளக்குகள் பழுது மனோபுரத்தில் 'திக்... திக்'
சோலார் விளக்குகள் பழுது மனோபுரத்தில் 'திக்... திக்'
சோலார் விளக்குகள் பழுது மனோபுரத்தில் 'திக்... திக்'
ADDED : மார் 12, 2025 02:03 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த சின்ன மனோபுரம், பெரிய மனோபுரம், ரெட்டிப்பாளையம் கிராமங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்தன. மாலை மற்றும் இரவு நேரங்களில் பொன்னேரி - தத்தமஞ்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமடக்கி, பணம், மொபைல் உள்ளிட்டவை வழிப்பறி செய்யப்பட்டன.
இதனால், கிராமவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வழிப்பறி சம்பவங்கள் தடுக்கப்பட்டன.
மேலும், கிராமவாசிகளின் பாதுகாப்பிற்காக, ரெட்டிப்பாளையம் - மனோபுரம் கிராமங்களுக்கு இடையே, 15 இடங்களில் சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
இரவு நேரங்களில் நல்ல வெளிச்சம் இருந்ததால், கிராமவாசிகள் நிம்மதியாக பயணித்து வந்தனர். தற்போது, அவை முற்றிலும் பழுதடைந்த கிடக்கின்றன.
விளக்குகள் சேதமடைந்தும், பேட்டரிகள், சோலார் பேனல்கள் ஆகியவை மாயமாகியும் உள்ளன. தற்போது, இரவு நேரங்களில் இக்கிராமங்களுக்கு இடையேயான சாலை கும்மிருட்டாக உள்ளது. இதனால், கிராமவாசிகள் வழிப்பறி சம்பவங்களை எண்ணி அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் செயலிழந்து கிடக்கும் சோலார் தெருவிளக்குகளை சீரமைக்க அல்லது புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.