/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
6 மாத குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
/
6 மாத குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : மே 28, 2024 05:58 AM

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு, கோவில் பதாகை, ராஜிவ் காந்தி நகரில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ராஜிவ் காந்தி நகர் 1வது தெரு, 3வது தெரு, 4வது மற்றும் 6வது தெருவில், நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அங்கிருந்து, மின் மோட்டார் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், 1, 4, 6 வது தெருவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மூன்று மின் மோட்டார்கள், ஒரே நேரத்தில் பழுதாகின.
வாரத்திற்கு ஒருமுறை மட்டும், மாநகராட்சி லாரிகள் வாயிலாக, ஆறு முறை தண்ணீர் வினியோகிக்கப்படுகின்றன. மற்ற நாட்களில், ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதனால், பகுதி வாசிகள் கடும் அவதியடைந்தனர்.
இது குறித்து கடந்த 20ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், இரவு பகலாக வேலை செய்து, பிரச்னைக்குரிய பகுதிகளில் புதிய நீர் மூழ்கி 'பம்ப்' பொருத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.
தற்போது, 4வது தெருவில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சீரமைப்பு பணியில், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறு மாதங்களாக நீடித்த தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்த 'தினமலர்' நாளிதழ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பகுதி வாசிகள் நன்றி தெரிவித்தனர்.