/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.3.80 கோடியில் அணுகுசாலை பணி 8 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
/
ரூ.3.80 கோடியில் அணுகுசாலை பணி 8 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ரூ.3.80 கோடியில் அணுகுசாலை பணி 8 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ரூ.3.80 கோடியில் அணுகுசாலை பணி 8 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ADDED : ஆக 08, 2024 02:49 AM

திருவள்ளூர்,:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கலியனுார் கிராமம். கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இக்கிராமத்தைச் சுற்றிலும், நெமிலியகரம், குப்பம்கண்டிகை, மணவூர், ராஜபத்மாபுரம், மருதவல்லிபுரம், சின்னம்மாபேட்டை உள்ளிட்ட 13 கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியர் கல்வி, மருத்துவ தேவை உள்ளிட்ட பல்வேறு வசதிக்காக, ஆற்றைக் கடந்து வருகின்றனர்.
மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், 13 கிராமங்களும் துண்டிக்கப்பட்டு, மாணவ - மாணவியர் விடையூர் பள்ளிக்கும், அப்பகுதிவாசிகள் திருவள்ளூர் செல்லவும், திருவாலங்காடு வழியாக, 25 கி.மீட்டர் சுற்றி வருகின்றனர்.
இதையடுத்து, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, விடையூர் - கலியனுாரை இணைக்கும் வகையில், ஆற்றின் குறுக்கே, 2016 - -17ல், 3.60 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆற்றின் நீளம் அதிகமாக இருப்பதால், சரியான திட்டமிடல் இன்றி, மேம்பாலம் 120 மீட்டருக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டதால், பணி முடிந்து, எட்டு ஆண்டுகளாகியும் ஆற்றின் இருபுற கரையும் மேம்பாலத்துடன் இணைக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, 3.80 கோடி ரூபாய் மதிப்பில் அணுகுசாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. கலியனுார் பகுதியில், 5 மீட்டர் அளவிற்கு ஒன்று என, 3 சிறுபாலம் 15 மீட்டர் துாரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
பின், கலியனுார் மற்றும் விடையூர் கிராமத்தை இணைக்கும் வகையில், அணுகு சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணி, மூன்று மாதங்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.