/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் பயணியர் நிழற்குடை கட்டட பணி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது
/
கிடப்பில் பயணியர் நிழற்குடை கட்டட பணி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது
கிடப்பில் பயணியர் நிழற்குடை கட்டட பணி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது
கிடப்பில் பயணியர் நிழற்குடை கட்டட பணி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது
ADDED : மே 03, 2024 01:17 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி.
இப்பகுதி வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி தொழிற்சாலை பேருந்து கனரக வாகனம் என தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே இருந்த பயணியர் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.
இதையடுத்து அரசு பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலா 5 லட்சம் ரூபாய மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வந்தது.
இதில் தற்போது நிழற்குடை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மேல்நல்லாத்துார் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை பயணியர் நலன்கருதி விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேல்நல்லாத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மது கூடமாக மாறிய நிழற்குடை
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி. இங்குள்ள போளிவாக்கம் சத்திரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி போளிவாக்கம் சத்திரம், குன்னத்துார் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாததால் விளம்பர போஸ்டர் ஒட்டும் இடம் மற்றும் மது அருந்தும் கூடாரமாகவும் மாறியுள்ளது.
இதனால் இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்த வரும் மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருள் சூழ்ந்த அரசு மருத்துவமனை வளாகம்
பள்ளிப்பட்டு அடுத்த கோனேட்டம்பேட்டையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு, பள்ளிப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும், ஆந்திர மாநிலம், நகரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர்.
மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மற்றும் நுழைவாயில் பகுதியில் மின்விளக்கு இன்றி இருள் சூழ்ந்துள்ளது.
இதனால், மருத்துவமனைக்கு வருபவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். பகுதிவாசிகளின் நலன் கருதி, மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.