/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலம் அமைத்து குழாய் இணைப்பு பழவேற்காடு மீனவ மக்கள் நிம்மதி
/
பாலம் அமைத்து குழாய் இணைப்பு பழவேற்காடு மீனவ மக்கள் நிம்மதி
பாலம் அமைத்து குழாய் இணைப்பு பழவேற்காடு மீனவ மக்கள் நிம்மதி
பாலம் அமைத்து குழாய் இணைப்பு பழவேற்காடு மீனவ மக்கள் நிம்மதி
ADDED : செப் 17, 2024 11:21 PM

பழவேற்காடு:பழவேற்காடு, கோட்டை குப்பம், தாங்கல் பெரும்புலம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 23 கிராமங்கள் கடல் பகுதியை ஒட்டி அமைந்திருக்கின்றன.
இங்கு, ஆழ்துளை மோட்டார்கள் வாயிலாக கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பாக இருப்பதால் சமைக்க, குளிக்க, குடிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் உள்ள ஏரியின் கரைகளில், 24 ஆழ்துளை மோட்டார்கள் அமைத்து குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
இங்கிருந்து பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் தேவைக்காக, தினமும் 16.50 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக, பொன்னேரி - பழவேற்காடு சாலையை ஒட்டி, ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இதில், மேற்கண்ட சாலையில் மூன்று இடங்களில் ஆரணி ஆற்றின் கிளை கால்வாய்கள் பயணிக்கின்றன.
அப்பகுதிகளில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், ஆற்றுநீரில் அடித்து செல்வதாலும், உவர்ப்பு நீரில் நீண்டநாள் மூழ்கி இருக்கும்போது துருப்பிடித்து சேதம் அடைவதாலும், குடிநீர் வினியோகம் பாதித்தது. மழைக்காலங்களில் குழாய் உடைப்புகளை சரிசெய்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தற்போது, ஆண்டார்மடம், கொடிமரம், போலாச்சியம்மன்குளம் ஆகிய பகுதிகளில் மேற்கண்ட கால்வாய்களின் குறுக்கே, சிறிய அளவிலான கான்கிரீட் பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவற்றின் மீது இரும்பு குழாய்கள் பதித்து, அதன் வழியாக குடிநீர் செல்லப்படுகிறது. இதன் வாயிலாக குழாய்கள் சேதம் அடைவது தடுக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் தடையில்லா குடிநீர் வழங்க முடியும் என்பதால் மீனவ மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.