/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் மின்விளக்கு அமைக்கும் பணி தீவிரம்
/
திருத்தணியில் மின்விளக்கு அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 12, 2024 12:45 AM

திருத்தணி:திருத்தணி மற்றும் சுற்றியுள்ள, 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து குறைந்தபட்சம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் அத்தியாவசிய பணிகள் காரணமாக திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.
இதுதவிர, திருத்தணியில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ள தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலம் வந்து முருக பெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில் திருத்தணி நகருக்கு உள்ளே நுழைவாயிலான திருப்பதி மற்றும் சென்னை மார்க்கத்திற்கு செல்லும் நந்தியாற்றின் இரு உயர்மட்ட பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் இருந்தது.
இதுதவிர, திருத்தணி பைபாஸ் சாலை, சித்துார் சாலை, அரக்கோணம் சாலை, பழைய சென்னை சாலை ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரால் விபத்துகள் தடுத்த மீடியன் சுவர் அமைத்துள்ளனர்.
அங்கும் மின்விளக்குகள் அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி வந்தனர். மேலும் வழிப்பறி சம்பவமும் நடந்து வந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் பயனாக, திருத்தணி நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுலா துறையின் மூலம், 50 லட்சம் ரூபாய் நிதி பெற்று தற்போது மேற்கண்ட இடங்களில் மின்விளக்குகள் பொருத்தும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையர் அருள் கூறியதாவது:
வாகன ஓட்டிகள் மற்றும் நகர மக்களின் நலன் கருதி, மேற்கண்ட இடங்களில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 60 உயர்மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அனைத்து விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரிய வைக்கப்படும். இதனால் விபத்துகள் தடுக்கலாம், மக்கள் அச்சமின்றி நடந்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

