/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'போதை' தடுப்பு விவகாரம் எல்லை கிராமங்களில் சோதனை
/
'போதை' தடுப்பு விவகாரம் எல்லை கிராமங்களில் சோதனை
ADDED : செப் 01, 2024 11:18 PM

திருத்தணி,: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின் படி, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், கலால் டி.எஸ்.பி., திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், நேற்று காலை தமிழக- - ஆந்திர மாநில எல்லையான திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா, நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, நெமிலி, வெங்கடாபுரம் மற்றும் பூனிமாங்காடு ஆகிய கிராமங்களில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினர்.
மேலும், கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா கடத்தலில் ஈடுபட்டிருந்த பழைய குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
'உங்களின் பொருளாதார தேவைக்கு எங்களால் முடிந்த உதவிகள் மற்றும் தட்கோ மூலம் கடனுதவி பெற்று தருகிறோம். ஏதாவது தொழில் செய்து வாழ்க்கை நடத்துங்கள்' என, டி.எஸ்.பி., கந்தன் அறிவுறுத்தினார்.
மேலும், போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரித்தார். இதை தொடர்ந்து, கிராம மக்களிடையே போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீசார் விளக்கினர்.
மேலும், திருத்தணி டி.எஸ்.பி., ஆந்திர மாநிலம் மங்களம் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்களிடம் போதை பொருட்கள் தமிழகத்திற்கு கடத்துவதற்கு உதவி புரிந்தால், உங்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.