/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றின் கரை, தரைப்பாலம் சேதம் அடைவது...தொடர்கதை!
/
ஆரணி ஆற்றின் கரை, தரைப்பாலம் சேதம் அடைவது...தொடர்கதை!
ஆரணி ஆற்றின் கரை, தரைப்பாலம் சேதம் அடைவது...தொடர்கதை!
ஆரணி ஆற்றின் கரை, தரைப்பாலம் சேதம் அடைவது...தொடர்கதை!
UPDATED : டிச 17, 2024 06:53 AM
ADDED : டிச 17, 2024 12:45 AM

பொன்னேரி: ஆரணி ஆற்றின் கரைகளை சீரமைப்பதிலும், உயர்மட்ட பாலம் அமைப்பதிலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், வெள்ளப்பெருக்கால், சீரமைக்கப்படாத கரைகள் வழியாக ஆற்று நீர் வெளியேறி, விவசாய நிலங்கள் மூழ்கடிக்கப்பட்டு உள்ளன.
அது மட்டுமின்றி தரைப்பாலம் உடைந்து, போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ஆண்டுதோறும் தொடரும் இந்த அவலத்தால், கிராமவாசிகளும், விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர்.
ருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக ஆரணிஆறு பயணிக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு, ஆற்றின் குறுக்கே, 11 ஷட்டர்களுடன் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது.
இந்த தடுப்பணையின் அருகே, காட்டூர் - பழவேற்காடு சாலையும் ஆற்றின் குறுக்கே பயணிக்கிறது. இந்த சாலை வழியாக ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு, கடப்பாக்கம், அபிராமபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பழவேற்காடு மற்றும் பொன்னேரி சென்று வருகின்றனர்.
மேலும், சென்னை மற்றும் மீஞ்சூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பழவேற்காடு பகுதிக்கு சென்றுவர இந்த சாலையை பயன்படுத்துவர். வாகன பயணத்திற்காக தடுப்பணை பணிகளை மேற்கொள்ளும்போது, ஆற்றின் குறுக்கே சிறிய சிமென்ட் உருளைகள் பொருத்தி தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
அதேசமயம், இந்த சாலைக்காக இருபுறமும் கரைகளை மூடப்படாமல் போடப்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த பகுதி வழியாக ஆற்று நீர் வெளியேறி, கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் இங்கு உயர்மட்ட பாலம் அமைத்து, கரைகளை மூடவேண்டும் என, கிராமவாசிகளும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்தனர். தரைப்பாலமும் பலவீனமாகவே இருந்தது. தற்காலிக தீர்வாக, கடந்த மாத இறுதியில், சவுக்கு கொம்புகளை கட்டி மணல் மூட்டைகளை அடுக்கி 'முட்டு' கொடுத்தனர். இது 'வெள்ளப்பெருக்குக்கு தாங்குமா' என, அப்போதே நம் நாளிதழில் சுட்டிக்காட்டினோம்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி, பிச்சாட்டூர் அணைக்கட்டில் இருந்து, 5,600 கனஅடி உபரிநீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆர்ப்பரித்து வந்த வெள்ளநீரால், கடந்த, 14ம் தேதி, ஆண்டார்மடம் புதிய தடுப்பணை நிரம்பி உபரிநீர் ஆர்ப்பரித்து சென்றது.
அதில், காட்டூர் - பழவேற்காடு சாலையில், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தால் 'முட்டு' கொடுத்து வைத்திருந்த தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
போக்குவரத்து ஸ்தம்பித்ததை தொடர்ந்து, அங்கு படகு போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து பாதிப்பால் கிராமவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி, பழவேற்காடு செல்ல, 10 - 15 கி.மீ., சுற்றிக் கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும், சீரமைக்கப்படாமல் கிடந்த கரைகள் வழியாக ஆற்று நீர் வெளியேறி, ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு கிராமங்களை சூழ்ந்து உள்ளது. நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களையும் மூழ்கடித்து உள்ளன. நெற்பயிர்கள் ஆற்றுநீரில் மூழ்கி கிடப்பதால், பாதிப்பை எண்ணி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், காட்டூர் - பழவேற்காடு சாலையை கடந்து, நீர்நிலைகளை நோக்கி பயணிப்பதால், மாற்று வழித்தட போக்குவரத்தும் பாதித்துள்ளது.
ஆரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கவும், கரைகளை மூடி சீரமைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காமல் தற்காலிக 'முட்டு' கொடுப்பதில் அரசு கவனம் செலுத்தியதால், இந்த ஆண்டும் இன்னல் நீடிப்பதாக கிராமவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்து உள்ளோம். பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை
ஒவ்வொரு ஆண்டும், பிச்சாட்டூர் அணைக்கட்டில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது, ஆற்று நீர் கடலுக்கு செல்ல வேண்டிய நிலையில், சீரமைக்கப்படாத கரைகள் வழியாக வெளியேறி விவசாய நிலங்களை மூழ்கடிக்கின்றன. இதனால் வருவாய் இழப்பிற்கு ஆளாகிறோம். விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், எம்.எல்.ஏ., - எம்.பி., - முதல்வர் தனிப்பிரிவு என, பல்வேறு தரப்பில் புகார் தெரிவித்தும் கரை சீரைப்பதில் அலட்சியம் காட்டுவதால், விவசாயிகளின் பாதிப்பு தொடர்கிறது.
- என்.புஷ்பராஜ், விவசாயி,
கடப்பாக்கம், பொன்னேரி.
கடை கிராமங்களை
அரசு புறக்கணிக்கிறது
கண்துடைப்பிற்காக, மழைக்காலம் துவங்கும்போது தரைப்பாலத்தை அரைகுறையாக சீரமைக்கின்றனர். கடைகோடியில் எங்கள் கிராமங்கள் இருப்பதால், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. அவசர உதவிக்கு எங்கும் செல்ல முடியாமல் பரிதவிக்கிறோம். உயர்மட்ட பாலம் அமைத்து, கரைகளை சீரமைத்தால் மட்டுமே இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
- எம்.பிரசாந்த்,
கிராமவாசி,
ஆண்டார்மடம், பொன்னேரி.

