/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றின் கரைகள் சீரமைப்பு பணி பருவ மழைக்குள் முடிக்க திட்டம்
/
ஆற்றின் கரைகள் சீரமைப்பு பணி பருவ மழைக்குள் முடிக்க திட்டம்
ஆற்றின் கரைகள் சீரமைப்பு பணி பருவ மழைக்குள் முடிக்க திட்டம்
ஆற்றின் கரைகள் சீரமைப்பு பணி பருவ மழைக்குள் முடிக்க திட்டம்
ADDED : ஆக 29, 2024 02:19 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, சோமஞ்சேரி, பிரளயம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் ஆரணி ஆற்றின் அருகில் அமைந்துள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் பலவீனமாக உள்ள கரைகள் உடைப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. ஆற்று நீர் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டு மழையின்போது, ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி ஆகிய கிராமங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து மழைநீர் வெளியேறி, குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் மூழ்கடித்தது.
இதனால் தத்தமஞ்சி, பிரளயம்பாக்கம், சோமஞ்சேரி, வஞ்சிவாக்கம், போலாச்சியம்மன்குளம், கணவான்துறை, தொட்டிமேடு, அவுரிவாக்கம், கம்மாளமடம் உள்ளிட்ட, 20 கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது.
கிராமவாசிகள் தங்கள் உடமைகளை இழந்தும், விவசாய நிலங்கள் மூழ்கியதால், விவசாயிகளும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர்.
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி ஆகிய கிராமங்களில், 27 கோடி ரூபாயில், 1070 மீ., நீளம், 7 மீ., உயரத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர்களுடன் கரைகள் பலப்படுத்தப்படுகிறது.
உடைப்பு ஏற்படும் ஆற்றின் வளைவு பகுதிகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் முடிந்து, கரைகள் பலப்படுத்தப்படுகின்றன.
இதற்காக, அருகில் உள்ள ஏரிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து கொட்டி, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் சமன்படுத்தப்படுகிறது.
மேலும், ஆற்றிற்கு மழைநீர் வரும் பகுதிகளில் உள்ள மதகுகளும் புதுப்பிக்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், கான்கிரீட் தடுப்புச்சுவர், மதகுகள் புதுப்பிப்பு, கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கரை உடைப்பு ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளால், கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

