/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு முகத்துவாரம் துார்வாரும் பணி வேகம்! நீண்டகால இன்னலுக்கு விரைவில் விமோசனம்
/
பழவேற்காடு முகத்துவாரம் துார்வாரும் பணி வேகம்! நீண்டகால இன்னலுக்கு விரைவில் விமோசனம்
பழவேற்காடு முகத்துவாரம் துார்வாரும் பணி வேகம்! நீண்டகால இன்னலுக்கு விரைவில் விமோசனம்
பழவேற்காடு முகத்துவாரம் துார்வாரும் பணி வேகம்! நீண்டகால இன்னலுக்கு விரைவில் விமோசனம்
ADDED : ஆக 25, 2024 11:17 PM

பழவேற்காடு: பழவேற்காடில், 26.85 கோடி ரூபாயில், நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், மீனவர்களின் நீண்டகால இன்னலுக்கு விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலும், ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதி வழியாக, 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
முகத்துவாரமானது மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்வதற்கான நுழைவு வாயிலாக இருக்கிறது. ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் சுழற்சி முறையில் பயணிப்பதற்கும் உதவுகிறது.
சிரமம்
இந்த சுழற்சியின் காரணமாகவும், கடல் அலைகளாலும் முகத்துவாரம் பகுதியில் அவ்வப்போது மணல் திட்டுக்கள் உருவாகி, மீனவர்கள் கடலுக்கு செல்வதில் சிரமத்தை உண்டாக்குகிறது.
இதனால், மீனவர்கள் பல நாட்கள் மீன்பிடி தொழிலை தவிர்க்கும் நிலையில், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பல லட்சம் ரூபாய் செலவிட்டு முகத்துவாரம் பகுதியில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றினாலும், அது நிரந்த தீர்வை தருவதில்லை.
இன்னலுக்கு ஆளாகிய மீனவர்களின் பல ஆண்டு கோரிக்கையின் பயனாக, நிரந்தர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு, 2019ல் நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 26.85 கோடி ரூபாய் ஒதுக்கியது.
பல்வேறு துறைகளின் அனுமதிக்காக, மூன்று ஆண்டுகள் காத்திருந்தது. கடந்த 2022ல் அதற்கான தீர்வு கிடைத்த நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் பணிகள் துவக்கப்பட்டது.
அதேசமயம், மத்திய வனத்துறையின் கீழ் உள்ள தேசிய வனவிலங்கு வாரியம், திடீரென திட்டப் பணிகளுக்கு தடை விதித்தது.
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து, தேசிய வனவிலங்கு வாரியத்திடம் பணிகளை துவங்க அனுமதி கேட்டு, தமிழக அரசு கடிதம் அனுப்பியது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அத்துறையின் அனுமதி கிடைத்தது.
அனைத்து துறைகளின் அனுமதி கிடைத்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன.
லைட்அவுஸ் குப்பம்
முதலில் அலை தடுப்புச்சுவர் அமைப்பதற்கு தேவையான பாறை கற்கள் கொண்டு செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. லைட் அவுஸ் குப்பத்தில். 5 கி.மீ., தொலைவிற்கு செம்மண் மற்றும் சரளை கற்கள் கொட்டி, புதிய வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, லாரிகளில் பெரிய பெரிய பாறை கற்கள் கொண்டு செல்லப்பட்டு, அவற்றை அடுக்கி, அலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அலை தடுப்புச்சுவரானது, கடல் மற்றும் ஏரியின் வடக்கு பகுதியில், 160 மீ., நீளம், தெற்கு பகுதியில் 150 மீ., நீளம் மற்றும் 4.5 மீ., உயரத்தில் அமைக்கப்படுகிறது.
மேலும், அலை தடுப்புச்சுவரின் நீளத்திற்கு, 200 -- 280 மீ., அகலம், 3 மீ., ஆழத்தில் மணல் திட்டுக்கள் வெளியேற்றப்பட உள்ளன. அடுத்தாண்டு, ஜூலை மாதத்திற்குள் திட்டப் பணிகளை முடிக்க ஒப்பந்த காலம் உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பணிகளை முடித்துவிட மீன்வளத்துறை திட்டமிட்டு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
லாரிகளில் பாறைகள் கொண்டு வருவது, அவற்றை கிரேன் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் நேர்த்தியாக அடுக்கி, அலை தடுப்புச்சுவர் அமைப்பது, மணல் திட்டுக்களை அகற்றுவது என, பணிகள் வேகமெடுத்து உள்ளன.
நிரந்தர முகத்துவாரம் அமைவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் ஆற்றுநீர் எளிதாக கடலுக்கு சென்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்குவதை தவிர்க்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆரணி மற்றும் பகிங்ஹாம் கால்வாய் வழியாக, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியை அடைகிறது.
அங்கிருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று சேர்கிறது. முகத்துவாரம் அடைபடுவதால், மழைநீர் கடலுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பொன்னேரி, பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புகளை சந்திக்கிறது.
எனவே, நிரந்தர முகத்துவாரம் வழியாக மழைநீர் எளிதாக கடலுக்கு செல்லும் என்பதால், இனி பாதிப்புகளை தவிர்க்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை முகத்துவாரம் பகுதியில் குவியும் மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.