பணம் கொடுக்க மறுத்தவரை தாக்கிய மூன்று பேருக்கு வலை
பணம் கொடுக்க மறுத்தவரை தாக்கிய மூன்று பேருக்கு வலை
ADDED : ஜூலை 02, 2026 09:01 PM
திருவாலங்காடு, ஜூலை 3–
திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 31. இவர், தனியார் நிறுவனம் ஒன்றில், வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்ற அவர், இரவு 7:30 மணிக்கு, தனது இரு சக்கர வாகனத்தில் களாம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பழைய காலனி அருகே, களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராக்கேஷ், 22, லோகேஷ், 24, பரத், 20, ஆகிய மூவரும், திடீரென தினேஷ்குமாரின் வாகனத்தை நிறுத்தி, பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், ‘என்னிடம் பணம் இல்லை’ என கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும், உருட்டு கட்டையால் தினேஷ்குமாரை தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து, தினேஷ்குமார் கொடுத்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து, ராக்கேஷ், லோகேஷ், பரத் ஆகியோரை தேடி வருகின்றனர்.
