/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடையை குளிர்விக்க புத்துாரில் முத்தான மூன்று அருவிகள்!: படையெடுக்கும் சுற்றுலா பயணியர்
/
கோடையை குளிர்விக்க புத்துாரில் முத்தான மூன்று அருவிகள்!: படையெடுக்கும் சுற்றுலா பயணியர்
கோடையை குளிர்விக்க புத்துாரில் முத்தான மூன்று அருவிகள்!: படையெடுக்கும் சுற்றுலா பயணியர்
கோடையை குளிர்விக்க புத்துாரில் முத்தான மூன்று அருவிகள்!: படையெடுக்கும் சுற்றுலா பயணியர்
ADDED : மே 08, 2024 12:01 AM

ஆர்.கே.பேட்டை:ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், புத்துார் அருகே உள்ள மூன்று நீர்வீழ்ச்சிகள், கோடையில், சுற்றுலா பயணியரை குளிர்வித்து வருகின்றன.
புத்துார் அடுத்த நாராயணவனம் வனப்பகுதியில், கைலாச கோனை, சிங்கிரி பெருமாள் கோனை மற்றும் கண்ணாடி கோனை என அழைக்கப்படும் மூன்று நீர்வீழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்று வருகின்றன.
இந்த நீர்வீழ்ச்சிகளில் ஆண்டு முழுதும் நீர்வரத்து உள்ளது சிறப்பு. மழைக்காலத்தில், அருகில் செல்ல முடியாத அளவிற்கு ஆக்ரோஷமாக கொட்டும் இந்த நீர்வீழ்ச்சிகள், கோடையில் ஆர்ப்பாட்டம் இன்றி இயல்பாக இருக்கும்.
கைலாச கோனை
கைலாச கோனை நீர்வீழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இருந்து பிச்சாட்டூர் வழியாக புத்துார் செல்லும் சாலையில், ஆரண்ய கண்டிகை பகுதியில் உள்ளது.
ஆரண்ய கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேற்கு நோக்கி, 1.5 கி.மீ., துாரம் சென்றால் நீர்வீழ்ச்சியை அடையலாம்.
நீர்வீழ்ச்சிக்கு செல்ல நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 30 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது.
பல்வேறு மூலிகை செடிகளும், மரங்களும் உள்ள இந்த மலையில் இருந்து பாயும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டி, பாறை பிளவுகளுக்கு இடையே, காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் அருள்பாலிக்கிறார்.
ஆந்திர மாநில சுற்றுலா துறை சார்பில் இங்கு தங்கும் விடுதிகளும் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிக்கு பேருந்து வசதியும் கிடையாது.
புத்துார், நாராயணவனம், கீளகரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே சென்று வந்தனர். பின், ஊத்துக்கோட்டையில் இருந்து புத்துாருக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதும், சென்னையில் இருந்து திருப்பதி செல்ல இந்த பாதை வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து இந்த மார்க்கத்தில் உள்ள கைலாச கோனை மற்றும் சிங்கிரி பெருமாள் கோனை நீர்வீழ்ச்சிகள் பிரபலம் அடைந்தன. தற்போது இங்கு, தனியார் ரிசார்ட்களும் செயல்பட்டு வருகின்றன. கைலாச கோனை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் இருந்த அடர்ந்த காடு, தற்போது ஆந்திர மாநில வனத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டு பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.
சிங்கிரி பெருமாள் கோனை
ஆரண்ய கண்டிகையில் இருந்து நாராயணவனம் செல்லும் வழியில், கீளகரம் கிராமத்தின் வழியாக கிழக்கில் 8 கி.மீ., பயணித்தால், சிங்கிரி பெருமாள் கோனை எனப்படும், சிங்க பெருமாள் கோனை நீர்வீழ்ச்சியை அடையலாம்.
அதிக ஆரவாரம் இன்றி, 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. நீர்வீழ்ச்சியை ஒட்டி, அதிக ஆழம் இல்லாத குளம் உள்ளது.
குளிக்க நீர்வீழ்ச்சியும், நீச்சல் அடிக்க குளத்தையும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் ஆக்கிரமிக்கின்றனர். நீர்வீழ்ச்சிக்கு நேர் எதிரே, 30 படிகள் கொண்ட மலைசரிவில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார்.
கோவில் நிர்வாகம் சார்பில், இங்கு, காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் கடைகள் எதுவும் கிடையாது. உணவும், குடிநீரும் இங்கு கிடைக்கும்.
கீளகரம் கிராமத்துடன் இணைந்த நாராயணவனத்தில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்த தலம் இந்த தலம் என்பது குறிப்பிடத்தக்கது. பத்மாவதி தாயாருக்கு மஞ்சள் அரைத்த கல், இந்த கோவிலில் உள்ளதை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
கண்ணாடி கோனை
கண்ணாடி கோனை நீர்வீழ்ச்சி, புத்துார் புறவழிச் சாலையில் இருந்து கிழக்கில் அமைந்துள்ளது. பிரதான சாலையில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, 2 கி.மீ., முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து தான் செல்ல முடியும்.
இங்கு நீர்வீழ்ச்சியும், அதையொட்டிய குளமும் அமைந்துள்ளன. குளக்கரையில் சிவன் கோவில் அமைந்துள்ளது சிறப்பு. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாயும் தண்ணீர் தெளிவாக உள்ளதால், இதற்கு கண்ணாடி கோனை என அழைக்கின்றனர்.

