/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.109 கோடியில் மூன்று ரயில்வே மேம்பால பணிகள் ஜவ்வு; 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் 10 ஆண்டுகளாக கடும் அவஸ்தை
/
ரூ.109 கோடியில் மூன்று ரயில்வே மேம்பால பணிகள் ஜவ்வு; 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் 10 ஆண்டுகளாக கடும் அவஸ்தை
ரூ.109 கோடியில் மூன்று ரயில்வே மேம்பால பணிகள் ஜவ்வு; 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் 10 ஆண்டுகளாக கடும் அவஸ்தை
ரூ.109 கோடியில் மூன்று ரயில்வே மேம்பால பணிகள் ஜவ்வு; 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் 10 ஆண்டுகளாக கடும் அவஸ்தை
UPDATED : பிப் 23, 2025 06:39 AM
ADDED : பிப் 23, 2025 01:33 AM

செவ்வாப்பேட்டை:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் கடவுப்பாதை, 13, 14, 15 என ஆகிய மூன்று இடங்களில், 108.95 கோடி ரூபாயில் திருத்திய மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் ஜவ்வாக நடந்து வருகிறது. இதனால் செவ்வாப்பேட்டை, திருவூர் 25, வேப்பம்பட்டு 26 வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு ஆகிய ஐந்து ஊராட்சிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 10 ஆண்டுகளாக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை -- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அம்பத்துார், ஆவடி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லுார், திருவள்ளூர், கடம்பத்துார், திருவாலங்காடு வழியாக புறநகர் மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் என, தினமும் 300க்கும் மேற்பட்ட முறைகள் கடந்து செல்கின்றன.
இதில், கடவுப்பாதை மூடப்படும்போது குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை, வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர். சில சமயங்களில், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கடவுப்பாதை எண்:13
சென்னை --- அரக்கோணம் மார்க்கத்தில், திருநின்றவூர் --- வேப்பம்பட்டு இடையே கடவுப்பாதை எண்:13ல், மேம்பால பணிக்காக, 2011- -- 12ம் ஆண்டு, 28.72 கோடி ரூபாய் மதிப்பில், 18 துாண்களுடன் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, ரயில்வே பகுதியில் இரு துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள், 2018ம் ஆண்டு நிறைவடைந்தது.
ஆனால், நெடுஞ்சாலை பகுதியில், 2018 ஆண்டு, 8.5 மீட்டர் அகலம், 800 மீட்டர் நீளத்தில் துவங்கப்பட்ட மேம்பால பணிகள், ஆறு ஆண்டுகளாகியும் எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி, 33.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி துவங்கி மந்த கதியில் நடந்து வருகிறது.
கடவுப்பாதை எண்:14@@
அதேபோல, ரயில்வே கடவுப்பாதை எண்:14ல் உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில், 2009-ம் ஆண்டில், 29.5 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது.
கடந்த 2012-ல், நெடுஞ்சாலைத் துறையால் துவங்கப்பட்ட பணிகள், பகுதிவாசிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் தடைபட்டது.
கடந்த 2022ம் ஆண்டு, டிசம்பர் மாதம் வழக்கு வாபஸ் பெறப்பட்டு, இடைக்கால தடை விலக்கி கொள்ளப்பட்டும் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து, இந்த மேம்பால பணிகளும், தற்போது திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, 37.72 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது பணி துவங்கி மந்தகதியில் நடந்து வருகிறது.
கடவுப்பாதை எண்:15
அதேபோல, கடவுப்பாதை எண்:15ல், செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே, ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில், 2015-ம் ஆண்டு, 20 கோடி ரூபாயில், 660 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், 10 ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் கடவுப்பாதை 13, 14, 15 ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது:
கடவுப்பாதை எண்:13ல் இரண்டு ஆண்டுகளிலும், எண்:14ல் ஓராண்டிலும் மேம்பால பணிகள் நிறைவடையும வகையில் திட்டமிட்டு நடந்து வருகிறது.
கடவுப்பாதை எண்:15ல், 37.90 கோடி ரூபாய் திருத்திய மதிப்பீல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், மேம்பால பணிகள் காலதாமதமாக மேற்கொண்டதால், ரத்து செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால், புதிய திட்ட மதிப்பின் படி, விரைவில் உயர் நீதிமன்ற வழக்கு நிறைவு பெற்று, 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு, ஓராண்டில் பணிகளை முடித்து, மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

