/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பதி ‛பாயிண்ட் டூ பாயிண்ட்' பேருந்துகளால் பயணியர் தவிப்பு
/
திருப்பதி ‛பாயிண்ட் டூ பாயிண்ட்' பேருந்துகளால் பயணியர் தவிப்பு
திருப்பதி ‛பாயிண்ட் டூ பாயிண்ட்' பேருந்துகளால் பயணியர் தவிப்பு
திருப்பதி ‛பாயிண்ட் டூ பாயிண்ட்' பேருந்துகளால் பயணியர் தவிப்பு
ADDED : ஆக 21, 2024 09:43 PM
கும்மிடிப்பூண்டி:சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, தடா, ஸ்ரீகாளஹஸ்தி வழியாக திருப்பதிக்கு, 14 தமிழக அரசு பேருந்துகள், தடம் எண்: 200 இயக்கப்படுகின்றன. அவற்றில், நான்கு குளிர்சாதன பேருந்துகளும், ஒன்பது டீலக்ஸ் பேருந்துகளும் ஆகும்.
ஒவ்வொரு பேருந்துகளும், தினசரி நான்கு சிங்கிள் அதாவது மாதவரம் - திருப்பதி இடையே இரு முறை இயக்கப்படுகிறது. அந்த பேருந்துகள் அனைத்து முக்கிய நிறுத்தங்களில் நின்று சென்றன. இதனால், எப்போதும் பயணியர் மற்றும் வசூலுக்கு குறைவு இன்றி அந்த பேருந்துகள் இயங்கி வந்தன.
சமீபத்தில், தடம் எண்: 200ல், உள்ள நான்கு குளிர்சாதன பேருந்துகளும், ஒரு டீலக்ஸ் பேருந்தும் ‛பாயிண்ட் டூ பாயிண்ட்' சேவையாக மாற்றப்பட்டன. தற்போது அந்த ஐந்து பேருந்துகளும், மாதவரம் - திருப்பதி இடையே ஸ்ரீகாளஹஸ்தியில் மட்டுமே நின்று செல்கிறது.
அந்த ஐந்து பேருந்துகளும், பரபரப்பான காலை மற்றும் மாலை நேரத்தில், ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இதனால், அந்த பரபரப்பான நேரங்களில் தடம் எண்: 200ல் பயணித்த பயணியர் தற்போது, மாதவரம் பேருந்து நிலையத்தில் அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, புதுவாயல், கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், தடா ஆகிய பகுதிகளுக்கு தினசரி பயணிக்கும் தொழிலாளர்கள், ஊழியர்கள், வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், புதிதாக மாற்றப்பட்ட ‛பாயிண்ட் டூ பாயிண்ட்' பேருந்துகளில், விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பயணியர் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சேவை மாற்றப்பட்டதில் இருந்து நஷ்டத்தில் அந்த பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, ‛பாயிண்ட் டூ பாயிண்ட்' சேவையை ரத்து செய்து முன்பு இருந்தது போல் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛தடம் எண்: 200, ‛பாயிண்ட் டூ பாயிண்ட்' சேவை நஷ்டத்தில் இயங்கி வருகிறது என உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். விரைவில் பழையபடி அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறோம்' என்றார்.