/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
/
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 08, 2024 01:14 AM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இவ்வூர் வழியே, ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்துார், நகரி, ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் லாரிகள் செல்கின்றன.
இதில் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். அதிகளவு வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தாலுகா தலைநகரான ஊத்துக்கோட்டையில் வட்டாட்சியர், டி.எஸ்.பி., உள்ளிட்ட உயரதிகாரிகளின் அலுவலகம் இங்கு உள்ளது. ஆனாலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை.
இங்குள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் பஜார் வழியே சென்று தான் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது.
வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை.நேற்று விநாயகர் சதுர்த்தி நாளை ஒட்டி விநாயகர் சிலைகள், மளிகை, பழ வகைகள் வாங்க மக்கள் அதிகளவு கூடியனர்.
இதில் நோயாளி ஒருவரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் கொண்டு செல்லும் வழியில் பஜார் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் சிக்கியது. 15 நிமிடத்திற்கு மேல் நெரிசலில் சிக்கிய, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்ற பின் திருவள்ளூர் சென்றது.
இதனால் மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் தினமும் அவதிப்படுகின்றனர்.
பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.